லக்னோ: தேர்தலில் போட்டியிடும் திட்டம் ஏதும் தமக்கு இல்லை என விவசாய சங்கத் தலைவரான ராகேஷ் திகாய்த் தெரிவித்துள்ளார்.
அரசியல் கட்சிகள் தேர்தல் களத்தில் தமது பெயரையோ புகைப்படங்களையோ பயன்படுத்த வேண்டாம் என்றும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.
புதிய வேளாண் சட்டங்களை எதிர்த்து டெல்லியின் புறநகர்ப் பகுதியில் முகாமிட்டு ஆயிரக்கணக்கான விவசாயிகள் கடந்த ஓராண்டுக்கும் மேலாகப் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.
இந்தப் போராட்டத்தை நடத்திய விவசாய அமைப்புகளுக்கு வழிகாட்டிய தலைவர்களில் ராகேஷும் ஒருவர்.
இந்நிலையில், பாஜகவுக்கு எதிராக அவர் தேர்தல் களம் காண இருப்பதாக ஒரு தகவல் வெளியானது. ஆனால் அவர் அதை திட்டவட்டமாக மறுத்துள்ளார்.
டெல்லி காவல்துறையில் காவலராகப் பணியாற்றி வந்த ராகேஷ் திகாய்த், கடந்த 1993ம் ஆண்டு வேலையில் இருந்து விலகினார்.
பின்னர் இரண்டு முறை உத்தரப்பிரதேச சட்டப்பேரவைத் தேர்தலில் வெவ்வேறு தொகுதிகளில் போட்டியிட்டு தோல்வி கண்டார்.

