அமராவதி: ஆற்றுப் பாலத்தில் சென்று கொண்டிருந்த அரசுப் பேருந்து கட்டுப்பாட்டை இழந்து, ஆற்றில் கவிழ்ந்த விபத்தில் பத்து பேர் பலியாகினர். இவர்களில் ஐவர் பெண்கள் ஆவர்.
நேற்று முன்தினம் காலை மேற்கு கோதாவரி மாவட்டத்தில் இந்த விபத்து நிகழ்ந்தது.
ஜல்லேரு பகுதியில் ஆற்றுப் பாலத்தின் மீது வேகமாகச் சென்று கொண்டிருந்த அந்த அரசுப் பேருந்து, முன்னால் சென்று கொண்டிருந்த மற்றொரு பேருந்தை முந்திச் செல்ல முயன்றது.
அப்போது எதிர்பாராதவிதமாக வேறொரு வாகனம் எதிரே வந்ததால், அதிர்ச்சி அடைந்த ஓட்டுநர், அரசுப்பேருந்தை இடப்பக்கமாக திருப்பியுள்ளார்.
இதனால் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து, பாலத்தின் தடுப்புச்சுவரை உடைத்துக்கொண்டு முப்பது அடிக்கும் கீழே உள்ள ஆற்றில் கவிழ்ந்தது. இந்த விபத்தில் பத்து பேர் நீரில் மூழ்கி இறந்தனர்.
அவர்களில் பேருந்து ஓட்டுநரும் அடங்குவார். நீச்சல் தெரிந்த சிலர் ஜன்னல் வழியாக வெளியேறி உயிர் பிழைத்தனர். படுகாயமடைந்த 13 பேர் காவல்துறை, மீட்புப் படையினரால் மீட்கப்பட்டனர்.

