பிரபஞ்ச அழகிக்கு பலத்த வரவேற்பு
புதிய பிரபஞ்ச அழகியாக மகுடம் சூட்டப்பட்டுள்ள இந்தியாவின் 21 வயது ஹர்னாஸ் சந்து நேற்று முன்தினம் மும்பை வந்தடைந்தார். அவருக்கு விமான நிலையத்தில் பலத்த வரவேற்பு அளிக்கப்பட்டது. படம்: ஏஎஃப்பி
மம்தா: பாஜக தோற்பதைப் பார்க்க ஆவலுடன் காத்திருக்கிறேன்
கோல்கத்தா: மேற்கு வங்க மக்களைப் போன்று நாட்டின் பிற மாநில மக்களும் சிந்திக்கும் பட்சத்தில் மத்தியில் உள்ள பாஜக அரசு, எதிர்வரும் 2024 தேர்தலில் தோல்வி அடையும் என மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார். கோல்கத்தாவில் மாநகராட்சித் தேர்தல் நடைபெற உள்ளது. இதையொட்டி நடைபெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் கலந்துகொண்டு பேசிய அவர், பாஜக தோற்பதை காண தாம் ஆவலுடன் காத்திருப்பதாகக் குறிப்பிட்டார். "கடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் மேற்குவங்கத்தில் சந்தித்த அதேநிலையை நாடு முழுவதும் அக்கட்சி சந்திக்கும்," என்றார் முதல்வர் மம்தா.
முப்படைத் தளபதிகள் குழுவுக்கு தலைவராக நரவனே நியமனம்
புதுடெல்லி: இந்திய முப்படைத் தளபதிகள் குழுவுக்கு மனோஜ் முகுந்த் நரவனே தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். முப்படைத் தலைமைத் தளபதி பிபின் ராவத் ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்ததை அடுத்து நரவனேவுக்கு இந்தப் பொறுப்பை அளித்துள்ளது மத்திய அரசு. முப்படைகளின் புதிய தலைமைத் தளபதி தேர்வு செய்யப்படும் வரை குழுவின் தலைவராக நரவனே செயல்படுவார் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது. முப்படைத் தளபதிகளில் மூத்தவர் என்ற அடிப்படையில் குழுவின் தலைவராக மனோஜ் முகுந்த் நரவனே நியமிக்கப்பட்டுள்ளார்.
துர்கா பூசைக்கு பாரம்பரிய அங்கீகாரம்
கோல்கத்தா: மேற்கு வங்க மாநிலத்தில் விமரிசையாகக் கொண்டாடப்படும் துர்கா பூசைக்கு உலகப் பாரம்பரிய அங்கீகாரம் (மதிப்பு) கிடைத்துள்ளது. இதற்கான அறிவிப்பை யுனெஸ்கோ அமைப்பு நேற்று முன்தினம் தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டது. மேலும், 'வாழ்த்துகள் இந்தியா' என்றும் அப்பதிவில் குறிப்பிடப்பட்டிருந்தது. இது குறித்து மகிழ்ச்சி தெரிவித்துள்ள அம்மாநில முதல்வர் மம்தா பானர்ஜி, 'இது பெருமைமிகு தருணம்' எனக் குறிப்பிட்டுள்ளார். பீகார், ஜார்க்கண்ட், ஒடிசா உள்ளிட்ட மேலும் சில மாநிலங்களிலும் துர்கா பூசை ஆண்டுதோறும் பெரும் விழாவாகக் கொண்டாடப்படுகிறது.
பெண்களின் குறைந்தபட்ச திருமண வயது 21ஆக உயர்த்தப்படுகிறது
புதுடெல்லி: பெண்களுக்கான திருமண வயதை 21ஆக உயர்த்தும் பரிந்துரையை மத்திய அமைச்சரவை ஏற்றுக் கொண்டுள்ளது. கடந்த ஆண்டு சுதந்திர தினத்தன்று உரையாற்றிய பிரதமர் மோடி, பெண்களின் உடல்நலம் குறித்து அரசு அக்கறை கொண்டுள்ளது என்றும் பெண்கள் சரியான நேரத்தில் திருமணம் செய்துகொள்ள வேண்டும் என்றும் குறிப்பிட்டார். மேலும், பெண்களின் குறைந்தபட்ச திருமண வயதை உயர்த்த அரசு முடிவு செய்துள்ளதாகவும் அறிவித்தார். அதன்படி, திருமண வயது 18ல் இருந்து 21ஆக உயர்த்தப்படுகிறது.

