சென்னை: நான்கு நாடுகளின் சார்பில் நான்கு செயற்கைக் கோள்கள் விண்ணுக்குப் பாய்ச்சப்படும் என்று மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்பம், பிரதமர் அலுவலக இணையமைச்சர் ஜிதேந்திர சிங் தெரிவித்துள்ளார்.
இதன் மூலம் நாட்டுக்கு 1,140 கோடி ரூபாய் வருமானம் கிடைக்கும் என்றார் அவர்.
இதற்காக 2021-2023 ஆண்டு களுக்கு இடையே நான்கு நாடு களின் செயற்கைக்கோள்களை விண்ணுக்கு அனுப்ப இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையம் ஒப்பந்தம் செய்துள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்தார். நாடாளுமன்றத்தில் எழுப்பப்பட்ட கேள்வி ஒன்றுக்கு அவர் எழுத்துப்பூர்வமாக அளித்த பதிலில் இது தெரிவிக்கப்பட்டது.
"வணிக ரீதியில் வெளிநாட்டு செயற்கைக்கோள்களை விண்ணில் ஏவுவதன் மூலம் 132 மில்லியன் யூரோ வருமானம் (இந்திய மதிப்பில் ரூ. 1,140 கோடி) இந்திய அரசுக்கு கிடைக்கும்.
"இந்திய விண்வெளி துறையின் கீழ் இயங்கும் இஸ்ரோவின் வணிகப் பிரிவான 'நியூ ஸ்பேஸ் இந்தியா லிமிடெட்' வணிக ரீதியில் வெளிநாட்டு செயற்கைக்கோள்களை பி.எஸ்.எல்.வி. உந்துகணை மூலம் அனுப்பி வருகிறது. 1999ஆம் ஆண்டு முதல் இதுவரை 34 நாடு களின் 342 செயற்கைக்கோள்கள் பி.எஸ்.எல்.வி. உந்துகணை மூலம் வணிக ரீதியில் ஏவப்பட்டுள்ளன.
"மாணவர்கள் தயாரித்த 12 செயற்கைக்கோள்கள் உள்பட 124 உள்நாட்டு செயற்கைக்கோள்கள் புவிவட்ட சுற்றுப் பாதையில் நிலைநிறுத்தப்பட்டுள்ளன. "இந்திய உந்து கணைகள் மூலமாக வெளிநாட்டு செயற்கைக்கோளை விண்ணில் ஏவுவதன் மூலம் 2019-2021 வரையிலான மூன்று ஆண்டுகளில் இந்திய அரசு, அந்நிய செலாவணி யாக 35 மில்லியன் யுஎஸ் டாலர் மற்றும் 10 மில்லியன் யூரோவை வருமானமாக பெற்றுள்ளது," என்று அமைச்சர் தெரிவித்தார்.