புதுடெல்லி: சிறுமி மீதான பாலியல் அத்துமீறல் தொடர்பான வழக்கில் சர்ச்சைக்குரிய தீர்ப்பு அளித்த மும்பை உயர் நீதிமன்ற பெண் நீதிபதி புஷ்பா கனேடிவாலாவை நிரந்தர நீதிபதியாக நியமிக்க 'கொலீஜியம்' மீண்டும் மறுத்துள்ளதாக தமிழக ஊடகமான தினமலர் வெளியிட்ட தகவல் தெரிவித்தது.
மஹாராஷ்டிர மாநிலம் மும்பை உயர் நீதிமன்ற பெண் நீதிபதி புஷ்பா கனேடிவாலா இந்தாண்டு ஜனவரியில் 'போக்சோ' சட்ட வழக்கில் அளித்த தீர்ப்பு சர்ச்சையைக் கிளப்பியது.
"ஆடைகளுடன் உள்ள சிறுமியின் மார்பகத்தைத் தொடுவது குற்றமாகாது. உடலுடன் உடல் தொடர்பு இருந்தால் மட்டுமே குற்றமாகும்," என்று தனது தீர்ப்பில் அவர் குறிப்பிட்டார். இதே போன்று மற்றொரு போக்சோ சட்ட வழக்கிலும் சர்ச்சைக்குரிய தீர்ப்பு வழங்கினார்.
இவர் வழங்கிய தீர்ப்புகளுக்கு உச்ச நீதிமன்றம் தடை விதித்துள்ளது.
உயர் நீதிமன்ற தற்காலிக நீதி பதியாக உள்ள அவரை, நிரந்தர நீதிபதியாக்குவதற்கு ஏற்கெனவே உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி என்.வி. ரமணா தலைமையிலான 'கொலீஜியம்' பரிந்துரை செய்திருந்தது.
ஆனால் அவரது சர்ச்சைக்குரிய தீர்ப்புகளால் கொலீஜியம் தனது பரிந்துரையை திரும்பப் பெற்றுக் கொண்டது. இரண்டாவது முறையாக அவரை நிரந்தர நீதிபதியாக்க கொலீஜியம் மறுத்துள்ளது. பிப்ர வரியில் அவரது பதவிக் காலம் முடிவுக்கு வருகிறது. அதன் பின் அவர் மீண்டும் மாவட்ட நீதிபதியாக நியமிக்கப்படுவார் எனத் தெரிகிறது.

