லக்னோ: பெண்களுக்கான திருமண வயது குறித்து சமாஜ்வாடி கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் தெரிவித்த கருத்து சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. அவருக்குப் பலரும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
இந்தியாவில் பெண்களின் திருமண வயது 18ஆக உள்ளது. ஆண்களைப் போலவே பெண்களின் திருமண வயதையும் 21ஆக அதிகரிக்க மத்திய அமைச்சரவை அண்மையில் ஒப்புதல் அளித்தது.
இதுகுறித்து கருத்து தெரிவித்த சமாஜ்வாடி கட்சி எம்பி சையீது துஃபாலி ஹசன், 18 வயதில் ஒரு பெண் வாக்களிக்கலாம் என்றால் 16 வயதில் ஏன் திருமணம் செய்யக்கூடாது" என்று கேள்வி எழுப்பி இருந்தார்.
"பெண்கள் 16 முதல் 30 வயது வரை கருத்தரிக்க முடியும். ஒருவேளை திருமணம் தள்ளிப்போனால் பெண்களுக்கு மலட்டுத்தன்மை ஏற்படுவதற்கான வாய்ப்பு உண்டு.
"அல்லது பெற்றோருக்கு அதிக வயதானபோதும் குழந்தைகள் மாணாக்கர் பருவத்தில் இருக்கும் சூழல் உருவாகிறது. வாழ்க்கையின் கடைசி அத்தியாயத்தில் இது வருந்தத்தக்க நிலையாகும்.
"எனவே கருத்தரித்தலுக்கான உடல் ரீதியான தகுதியைப் பெறும்போது பெண்களுக்குத் திருமணம் செய்துவிட வேண்டும்.
"16 வயதில் பூப்பெய்தினால் அப்போதே திருமணம் செய்யலாம்," என்றும் சையீது துஃபாலி ஹசன் ஏஎன்ஐ செய்தி நிறுவனத்துக்கு அளித்த பேட்டியில் கூறியதாக ஊடகச் செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.
சமாஜ்வாடி கட்சியின் மற்றொரு உறுப்பினரான ஷஃபிகூர் ரஹ்மான் பர்க், இந்தியா ஓர் ஏழை நாடு என்பதால் பெற்றோர் தங்கள் மகளுக்கு விரைவில் திருமணம் செய்து வைக்க விரும்புவதாகக் கூறியுள்ளார்.
இதேவேளையில், மத்திய அமைச்சரவையின் முடிவை தாம் வரவேற்பதாக மாநிலங்களவை உறுப்பினரான ஜெயாபச்சன் தெரிவித்துள்ளார்.
பெண்கள் கல்வி கற்கவும் சுதந்திரத்தை அனுபவிக்கவும் நல்ல வேலை வாய்ப்புகளைப் பெறவும் மத்திய அரசு கொண்டு வரும் புதிய சட்டம் வழிவகுக்கும் என்று அவர் கூறியுள்ளார்.
இந்த சர்ச்சை குறித்து சமூக வலைத்தளங்களில் ஏராளமானோர் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

