லக்னோ: இட ஒதுக்கீட்டை அமல்படுத்துவதில் பிரதமர் மோடி நேர்மையாகச் செயல்படவில்லை என தாழ்த்தப்பட்டோர், பழங்குடியினர் நலனுக்கான நாடாளுமன்ற நிலைக்குழு சாடியுள்ளது.
இக்குழுவுக்கு அகமதாபாத் மேற்கு தொகுதி பாஜக எம்.பி. கிரித் பிரேம்ஜிபாய் சோலான்கி தலைமை வகிக்கிறார்.
இந்நிலையில் தொலைத்தொடர்பு நிறுவனமான பிஎஸ்என்எல் அண்மையில் சிலரை பணியில் சேர்த்திருப்பதாகவும் அதில் இட ஒதுக்கீட்டு முறை பின்பற்றப்படவில்லை என்றும் அந்தக் குழு குற்றம்சாட்டி உள்ளது.
அதில் உள்ள 30 எம்பிக்களில் பாஜகவினரே அதிகம் இடம்பெற்றுள்ளனர் என்பதால் அக்கட்சி வட்டாரங்களில் சலசலப்பு நிலவுகிறது.
"பிஎஸ்என்எல் ஒப்பந்ததாரர்கள் மூலம் சில பணியாட்களை நியமித்து வருகிறது. இருந்தாலும் பிஎஸ்என்எல்தான் முதன்மைப் பணி வழங்குநர் என்ற அடிப்படையில் இட ஒதுக்கீட்டைச் செயல்படுத்த வேண்டும்.
"ஓர் அரசாங்கமானது ஒடுக்கப்பட்ட மக்களுக்காக இட ஒதுக்கீட்டை நேர்மையாகச் செயல்படுத்த வேண்டும். அது, நேரடிப் பணி நியமனமாக இருந்தாலும் சரி, ஒப்பந்ததாரர்கள் மூலம் வழங்கப்படும் வேலையாக இருந்தாலும் சரி, இட ஒதுக்கீட்டை முறையாக உறுதி செய்ய வேண்டும்," என்றும் அந்தக் குழு பரிந்துரைத்துள்ளது.
இதற்கிடையே பிஎஸ்என்எல் நிர்வாகம் இது தொடர்பாக அளித்த விளக்கத்தில், ஒப்பந்ததாரர்கள் பணியாளர்களைப் பணியமர்த்தும்போது இட ஒதுக்கீட்டு வழிமுறைகளைப் பின்பற்றி ஆட்களைப் பணியமர்த்த வேண்டும் என்றும் எந்தவித உத்தரவையும் பிறப்பிப்பதில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

