புதுடெல்லி: உலக அழகிப் போட்டியில் பங்கேற்க இருந்த 16 அழகிகளுக்கு கொரோனா தொற்றுப் பாதிப்பு இருப்பது உறுதியானதை அடுத்து, அந்தப் போட்டி தள்ளி வைக்கப்பட்டது. பாதிக்கப்பட்டவர்களில் இந்திய அழகி மானசா வாரணாசியும் (படம்) ஒருவர் ஆவார்.
அண்மையில் பிரபஞ்ச அழகிப்போட்டி நடந்து முடிந்துள்ளது. இதையடுத்து 2021ஆம் ஆண்டுக்கான உலக அழகிப் போட்டி அமெரிக்காவின் போர்ட்டோ ரிக்கோவில் நடைபெற இருந்தது.
இதற்கான ஏற்பாடுகள் அனைத்தும் தயார் நிலையில் இருந்த வேளையில், இப்போட்டியில் பங்கேற்க இருந்த அழகிகளுக்கு கிருமி தொற்றியுள்ளது.
இதையடுத்து அவர்கள் அனைவரும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். அவர்களுக்கு உரிய சிகிச்சை அளிக்கப்படுவதாக ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.
அடுத்த 90 நாள்களில் இறுதிப்போட்டி போர்ட்டோ ரிக்கோவிலேயே வேறு இடத்தில் நடத்தப்படும் என்றும் அவர்கள் கூறியுள்ளனர்.
இது தொடர்பாக வெளியிடப்பட்ட அதிகாரபூர்வ அறிக்கையில், சுகாதார அதிகாரிகள், நிபுணர்களுடன் கலந்தாலோசித்த பிறகு இறுதிப்போட்டியை ஒத்திவைக்கும் முடிவு எடுக்கப்பட்டதாக ஏற்பாட்டாளர்கள் மேலும் தெரிவித்துள்ளனர்.

