புதுடெல்லி: இந்தியாவின் உத்தரப் பிரதேசத்தின் மேற்குப் பகுதி, டெல்லி, உத்தரகாண்ட், இமாச்சலப் பிரதேசம், பஞ்சாப், ஹரியானா ஆகிய மாநிலங்களில் கடுமையான குளிர்க்காற்றும் பனிப்பொழிவும் நிலவி வருகிறது. மேலும், பனிமூட்டம் காரணமாக மக்கள் வீட்டுக்குள் முடங்கிக்கிடக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. ராஜஸ்தான் உள்ளிட்ட சில மாநிலங்களில் வெப்பநிலை மைனஸ் டிகிரியை தொட்டதால் மக்கள் கடுங்குளிரால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
மேற்கு ராஜஸ்தான் மாநிலத்தின் சுரு என்ற இடத்தில் நேற்று முன்தினம் -3.3 டிகிரியாக வெப்பநிலை பதிவாகியுள்ளது.
இமாச்சலப் பிரதேசம், ஹரியானா, சண்டிகார், டெல்லி, மேற்கு உத்தரப் பிரதேசத்தில் பெரும்பாலான இடங்களில -1.6 டிகிரி முதல் -3.0 டிகிரி வரை பதிவாகியுள்ளதாக தேசிய வானிலை மையம் தெரிவித்துள்ளது.
ஸ்ரீநகரிலும், காஷ்மீரிலும் வெப்பநிலை பூஜ்ய டிகிரி நிலைக்கும் குறைவாக வெள்ளிக்கிழமை இரவு பதிவானது. இதனால் தண்ணீா் விநியோகிக்கும் குழாய்களும் நீா்நிலைகளும் உறைந்து போயின.
காஷ்மீரில் அடுத்த சில நாள்களுக்கு கடுமையான குளிா் நீடிக்கும் என வானிலைத்துறை தெரிவித்துள்ளது. குறிப்பாக கிறிஸ்துமஸையொட்டி, டிசம்பா் 23 முதல் டிசம்பா் 25 வரை கடுமையான குளிா் நிலவும் எனக் கூறப்படுகிறது. அமிர்தசரஸில் ஒரு டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவானது. இமாச்சலப் பிரதேசத்தின் லஹால் ஸ்பிட்டி என்னும் இடத்தில் உள்ள சிஸ்ஸு ஏரி உறைந்து காணப்படுகிறது. அங்கு வெப்பநிலை மைனஸ் ஜீரோவைத் தொட்டுள்ளது. போபால் உள்ளிட்ட பல பகுதிகளில் கடந்த வெள்ளி, சனிக்கிழமைகளில் கடுமையாக குளிர்க்காற்று வீசியதாகவும் அங்கு குறைந்தபட்ச வெப்பநிலை 4 டிகிரியாகப் பதிவானதாகவும் கூறப்படுகிறது.

