திருவனந்தபுரம்: கேரள மாநிலத்தில் ஆலப்புழாவில் பாஜக மற்றும் எஸ்டிபிஐ கட்சியைச் சேர்ந்த இரண்டு பிரமுகர்கள் கொலை செய்யப்பட்டுள்ளனர்.
இந்திய சமூக ஜனநாயக கட்சியின் (எஸ்டிபிஐ) மாநிலச் செயலாளர் கே.எஸ்.ஷான், நேற்று முன்தினம் ஆலப்புழாவில் இரண்டு சக்கர வாகனத்தில் வெளியில் சென்றுவிட்டு வீடு திரும்பிய போது எதிரே வந்த வாகனம் ஒன்று அவரை மோதித் தள்ளியது.
அவரது வீட்டின் அருகே நடந்த இந்தச் சம்பவத்தில் கடுமையாகக் காயமடைந்த அவர் கொச்சி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு சிகிச்சை பயனின்றி உயிரிழந்தார். அவரை மோதித் தள்ளியவர்கள் அங்கிருந்து தப்பியோடிவிட்டனர். இது விபத்து அல்ல; தாக்குதல் என்று எஸ்டிபிஐ கட்சி கூறியுள்ளது.
இந்த தாக்குதலை, பாஜகவின் தாய் அமைப்பான ஆர்எஸ்எஸ் நடத்தியுள்ளதாக எஸ்டிபிஐ குற்றம்சாட்டியுள்ளது. கே.எஸ்.ஷானை ஆர்.எஸ்.எஸ். உறுப்பினர்கள் கொலை செய்துவிட்டதாக எஸ்.டி.பி.ஐ தலைவர் எம்.கே. ஃபைசி குற்றம் சாட்டினார்.
இந்நிலையில், பா.ஜ.க.வின் ஒபிசி மோர்ச்சா செயலாளர் ரஞ்சித் சீனிவாசனை ஆலப்புழாவில் உள்ள அவரது வீட்டில் நேற்றுக் காலை அடையாளம் தெரியாத சிலர் வெட்டிக் கொன்றனர். கே.எஸ். ஷான் இறந்த மறுநாளே பாரதிய ஜனதா கட்சித் தலைவர் ரஞ்சித் கொலைச் சம்பவம் அரங்கேறியுள்ளதால் இது பழிவாங்கும் நோக்கத்தினால் நடந்திருக்கலாம் என்று கருதப்படுகிறது. எனவே, அசம்பாவிதங்கள் மேலும் தொடராமல் இருக்கும் வகையில் ஆலப்புழாவில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
"இந்த அரசியல் கொலைகளைக் கண்டித்துள்ள அம்மாநில முதல்வர் பினராயி விஜயன், இத்தகைய கொடூரமான, மனிதாபிமானமற்ற வன்முறைச் செயல்கள் கண்டிக்கத்தவை. இதுகுறித்து காவல்துறை விசாரணை மேற்கொண்டுவருகின்றனர். குற்றவாளிகள் கண்டுபிடிக்கப்பட்டு அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்," என்று கூறினார்.

