மேடையில் சிறுவனைத் தாக்கிய உத்தர பிரதேச மாநில பாஜக எம்பி
ராஞ்சி: நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் ஒரு மேடையில் இளைஞர் ஒருவரை கன்னத்தில் அறைந்த காணொளிக்காட்சி சமூக ஊடகங்களில் பரபரப்பாகப் பரிமாறப்பட்டு வருகிறது. உத்தரப் பிரதேச மாநில பாஜக எம்பி பிரிஜ்பூஷன் ஷரன் சிங், இந்திய மல்யுத்த கூட்டமைப்பின் தலைவராகவும் உள்ளார். இவர் ஜார்க்கண்ட் மாநிலம் ராஞ்சியில் நடைபெற்ற 15 வயதுக்கு உட்பட்டவர்கள் கலந்துகொள்ளும் தேசிய மல்யுத்த சாம்பியன்ஷிப் போட்டியின் தொடக்க விழாவிற்கு சிறப்பு விருந்தினராகச் சென்றார். பதினைந்து வயதைத் தாண்டிய ஒரு சிறுவன், விடாப்பிடியாக எம்பியிடம் சென்று தன்னை விளையாட அனுமதிக்குமாறு கேட்டுக்கொண்டே இருந்தார். இதனால் ஒரு கட்டத்தில் நிதானம் இழந்த நாடாளுமன்ற உறுப்பினர், மேடையிலேயே அவரை அறைந்தார். பின் அந்த சிறுவன், மேடையில் இருந்து அழைத்துச் செல்லப்பட்டார்.
'குன்னூர் ஹெலிகாப்டர் விபத்தை துல்லியமாக விசாரிப்போம்'
ஹைதராபாத்: குன்னூர் ஹெலிகாப்டர் விபத்தில் முப்படைத் தளபதி பிபின் ராவத், அவரது மனைவி மதுலிகா ராவத் உட்பட 14 பேரை பலிவாங்கிய ஹெலிகாப்டர் விபத்து குறித்து எந்த ஒரு சிறிய ஆதாரத்தையும் விடமாட்டோம். துல்லியமாக விசாரிப்போம் என்று இந்திய விமானப்படைத் தளபதி விவேக்ராம் சவுத்ரி நேற்று ஹைதராபாத்தில் கூறினார்.
ஹைதராபாத் அருகே மெட்சல் மாவட்டத்தில் உள்ள துண்டிகல் விமானப் படைத்தளத்தில் பயிற்சியை நிறைவு செய்த விமானப்படை வீரர்களின் அணிவகுப்பில் அவர் இவ்வாறு பேசினார். "விபத்து குறித்து முழுமையாகத் தெரியவர இன்னும் சில வாரங்கள் ஆகும். அதற்குள் நாம் எந்த முடிவுக்கும் வரமுடியாது. ஆனால், சம்பவ இடத்தில் கிடைத்துள்ள அனைத்து ஆதாரங்களையும் சேகரித்துள்ளோம். சாட்சிகளிடமும் விசாரணை நடைபெற்று வருகிறது," என்று கூறினார்.
மின்ஸ்கூட்டர் வெடித்து முதியவர் பலி
குருகிராம்: ஹரியானா மாநிலத்தில் குருகிராம் என்ற ஊரில் முதியவர் சுரேஷ் சாஹூ, அவரது மனைவி மற்றும் மூன்று மகன்கள் ஆகியோர் வீட்டில் உறங்கிக்கொண்டிருந்தனர். அப்போது வீட்டிற்குள்ளே நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இ-ஸ்கூட்டர் திடீரென்று பெரும் சத்தத்துடன் வெடித்தது. பின் அங்கு கிடந்த துணிகளில் தீப்பற்றி வீடு முழுவதும் பரவியது. இந்த விபத்தில் சுரேஷ் சாஹூ உடல் கருகி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். அவரது மனைவி மற்றும் மகன்களும் அக்கம்பக்கத்தினரால் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர் வீட்டிற்குள் ஸ்கூட்டருக்கு மீன்சாரம் ஏற்றிக்கொண்டிருந்த போது அதன் மின்களம் வெடித்து தீப்பற்றியிருக்க வேண்டும் என்று காவல்துறை அதிகாரிகள் கூறினர்.
கோவா விடுதலை தின கொண்டாட்டத்தில் பிரதமர் மோடி
பனாஜி: கோவாவில் ஆண்டுதோறும் டிசம்பர் 19ஆம் தேதி விடுதலை தினம் கொண்டாடப்படுகிறது. விடுதலை தினத்திற்கு அரசியல் கட்சித் தலைவர்கள் வாழ்த்துத் தெரிவித்து வருகின்றனர். இதற்கிடையே பிரதமர் மோடி கோவா விடுதலை தினக் கொண்டாட்டத்தில் பங்கேற்பதற்காக நேற்று பிற்பகல் விமானம் மூலம் கோவா சென்றுள்ளார். பனாஜி விமான நிலையத்தில் இறங்கிய பிரதமர் மோடிக்கு அம்மாநில முதல்வர் பிரமோத் சாந்த் உள்ளிட்டோர் வரவேற்பு அளித்தனர்.
பனாஜியில் உள்ள ஆசாத் மைதானத்தில் உள்ள தியாகிகள் நினைவிடத்தில் பிரதமர் நரேந்திர மோடி அஞ்சலி செலுத்தினார்.
கோவா விடுதலைப் போராட்ட வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில், மறுவடிவமைக்கப்பட்ட அகுவாடா கோட்டை சிறை அருங்காட்சியகத்தைத் திறந்து வைப்பதுடன், கோவா மருத்துவக் கல்லூரியில் சிறப்பு பல்நோக்கு கட்டடத்தையும் திறந்து வைக்கிறார். தொடர்ந்து, கோவாவில் 650 கோடி மதிப்பிலான பல வளர்ச்சித் திட்டங்களை திறந்து வைப்பதுடன் அடிக்கல் நாட்டுகிறார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. கோவாவில் சட்டமன்றத் தேர்தல் விரைவில் வரவுள்ளதைக் கருத்தில் கொண்டு பிரதமர் மோடி அங்கு சென்றுள்ளதாகக் கூறப்படுகிறது.

