பெலகாவி: பெலகாவி சுவர்ண சவுதாவில் கர்நாடக சட்டசபையின் குளிர்கால கூட்டத்தொடர் கடந்த 13-ந் தேதி தொடங்கியது. ஆனால் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து மராட்டியத்தைச் சேர்ந்த எம்.இ.எஸ்.(மராட்டிய ஏகிகிரண் சமிதி) அமைப்பு போராட்டம் நடத்தியது. அப்போது எம்.இ.எஸ். அமைப்பின் மூத்த தலைவர் மீது கன்னட அமைப்பினர் கறுப்பு மையைப் பூசினர். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது.
இதற்கிடையே பெலகாவியில் சட்டசபை குளிர்கால கூட்டத்தொடர் நடத்த எதிர்ப்பு தெரிவித்து மராட்டிய மாநிலம் கோலாப்பூரில் எம்.இ.எஸ். தொண்டர்கள், கன்னட கொடியை எரித்தனர். இதற்கு கர்நாடகத்தில் கடும் எதிர்ப்பு கிளம்பி இருந்தது. எம்.இ.எஸ். அமைப்பைக் கண்டித்து கர்நாடகத்தில் கன்னட அமைப்பினர் போராட்டம் நடத்தி வந்தனர். இந்த நிலையில் பெங்களூருவில் உள்ள சிவாஜி சிலை மீது கன்னட அமைப்பினர் கறுப்பு மை பூசி அவமதித்தனர். இதை கண்டித்து நேற்று முன்தினம் பெலகாவியில் எம்.இ.எஸ். அமைப்பினர் போராட்டம் நடத்தினர். இதையடுத்து எம்.இ.எஸ். அமைப்பினர் மீது காவல்துறையினர் தடியடி நடத்தி விரட்டினர்.
இந்த நிலையில் பெலகாவியில் கர்நாடக அரசுக்குச் சொந்தமான 6 கார்கள், 6 காவல்துறை வாகனங்கள் உள்பட 26 வாகனங்கள் அடித்து நொறுக்கப்பட்டன. அதில் காவல்துறை வாகனம் ஒன்று தீக்கிரையாக்கப்பட்டது. அங்குள்ள சங்கொள்ளி ராயண்ணாவின் சிலையின் கையில் வைக்கப்பட்டு இருந்த வாள், கேடயத்தை சிலர் சேதப்படுத்தினர். வன்முறையில் ஈடுபட்டவர்களை அதிகாரிகள் கண்காணிப்புக் கருவிகளின் பதிவுகள் மூலம் அடையாளம் கண்டனர். அவர்கள் அனைவரும் எம்இஎஸ் இந்து அமைப்பைச் சேர்ந்தவர்கள் என்பது உறுதியானது. ஸ்ரீராம சேனை இந்துஸ்தான் அமைப்பின் தலைவர் ராமகந்தா, மற்றும் மராட்டிய அமைப்பினர் உள்பட 27 பேர் கைதுசெய்யப்பட்டனர். அவர்களை 14 நாட்கள் நீதிமன்ற காவலில் வைத்து விசாரிக்க நீதிபதி உத்தரவிட்டார்.

