இந்தியா: 'இருமல் மருந்தை' அருந்திய சிறுவர்கள் மூவர் உயிரிழப்பு

இந்தியா: 'இருமல் மருந்தை' அருந்திய சிறுவர்கள் மூவர் உயிரிழப்பு

2 mins read
8bd6ce50-d5b8-4994-bb02-63c021dc5ab9
மாதிரி படம் -

இந்தியத் தலைநகர் புதுடெல்லியில், மாநில அரசாங்கம் நடத்தும் சமூக (மொஹல்லா) மருந்தகம் ஒன்று வழங்கிய 'இருமல் மருந்தை' அருந்தியதாகக் கூறப்படும் சிறுவர்கள் மூவர் உயிரிழந்துவிட்டதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

சுகாதாரச் சேவை இயக்ககம் அதன் விசாரணை அறிக்கையில் வெளியான இத்தகவலைச் சுட்டி இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

'இருமல் மருந்து' அருந்தியதன் தொடர்பில் புதுடெல்லியின் கலாவதி சரன் சிறார் மருத்துவமனையில் மொத்தம் 16 சிறுவர்கள் அனுமதிக்கப்பட்டனர். அவர்களில் மூவர் இறந்துவிட்டனர்.

"டெல்லி அரசாங்கத்தின் மொஹல்லா மருந்தகங்கள், 'டெக்ஸ்ட்ரோமெட்டர்ஃபன்' எனும் மருந்தை இந்தச் சிறுவர்களுக்கு வழங்கின. சிறுவயதினருக்கு இந்த மருந்து உகந்ததல்ல. 'ஒமேகா ஃபார்மசியூட்டிகல்ஸ்' எனும் நிறுவனம் இந்த மருந்தைத் தயாரித்தது," என்று விசாரணை அறிக்கையில் குறிப்பிடப்பட்டது.

நான்கு வயதுக்குட்பட்ட சிறுவர்களுக்கு 'டெக்ஸ்ட்ரோமெட்டர்ஃபன்' மருந்தை எழுதித் தர வேண்டாம் என சமூக மருந்தகங்களுக்கும் மருந்துக் கடைகளுக்கும் நோட்டீஸ் வழங்குமாறு டெல்லி அரசாங்கத்திடம் சுகாதாரச் சேவை இயக்ககம் கேட்டுக்கொண்டுள்ளது.

மேலும், பொதுநலனைக் கருதி 'டெக்ஸ்ட்ரோமெட்டர்ஃபன்' மருந்தை மீட்டுக்கொள்ளும்படி இயக்கம் பரிந்துரைத்துள்ளது.

ஐந்து வயதுக்குட்பட்ட சிறுவர்களுக்கு இந்த மருந்தை வழங்க பரிந்துரைக்கப்படாவிட்டாலும், அது இன்னமும் பயன்படுத்தப்பட்டு வருவதாக ஏய்ம்ஸ் பாட்னா மருத்துவமனையைச் சேர்ந்த குழந்தைநல மருத்துவரான டாக்டர் சந்திர மோகன் குமார், ஐஏஎன்எஸ் நிறுவனத்திடம் கூறினார்.

"பார்வை மங்குதல், அசதி, கோபம் ஏற்படுவது உள்ளிட்ட பக்க விளைவுகள் இந்த மருந்தால் ஏற்படுவது வழக்கம். ஆனால், உயிரைப் பறிக்கும் அளவுக்குக் கடுமையான பக்க விளைவுகள் ஏற்பட்டதாக இதுவரை தகவல் இல்லை.

"இந்த மரணங்கள் குறித்து கூடுதல் விசாரணை தேவைப்படலாம். என்றபோதிலும், பாதிக்கப்பட்ட சிறுவர்கள் அளவுக்கு அதிகமாக மருந்தை உட்கொண்டு இருந்திருக்கலாம் எனச் சந்தேகிக்கப்படுகிறது," என்றார் டாக்டர் சந்திர மோகன்.