புதுடெல்லி: பிரிட்டனைப் போல் இந்தியாவில் ஓமிக்ரான் பாதிப்பு அதிகரித்துவிடக் கூடாது என்றும் அந்நாட்டில் ஓமிக்ரான் பாதிப்பு அதிகரித்து வருவது கவலை அளிப்பதாகவும் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையின் இயக்குநர் ரன்தீப் குலேரியா தெரிவித்துள்ளார்.
பிரிட்டனில் பாதிப்பு நிலவரம் குறித்து வெளியான தகவல்களைச் சுட்டிக்காட்டிய அவர், இந்திய மக்களும் எத்தகைய சூழலையும் எதிர்கொள்ளத் தயாராக இருக்க வேண்டும் என அவர் அறிவுறுத்தி உள்ளார்.
எனினும் நாடு முழுவதும் மேற்கொள்ளப்பட்ட தொற்றுப் பரவல், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் காரணமாக, இந்தியாவில் நிலைமை மோசமடையாது எனத் தாம் நம்புவதாக புனேயில் செய்தியாளர்களிடம் பேசுகையில் ரன்தீப் குலேரியா குறிப்பிட்டார்.
"ஓமிக்ரான் பாதிப்பின் தன்மை குறித்து சில விஷயங்களைத் தீர்மானிக்க கூடுதல் புள்ளி விவரங்களும் தகவல்களும் தேவைப்படுகின்றன. உலகளவில் பல நாடுகளில் ஓமிக்ரான் தொற்றுப் பரவல் எவ்வாறு உள்ளது என்பதை நாம் கண்காணிப்பது அவசியம்.
"எதற்கும் தயாாரக இருப்போம். அதைவிட ஓமிக்ரான் பரவாமல் தடுக்கும் வகையில் கொரோனா பாதுகாப்பு வழிமுறைகளைக் கடைப்பிடிக்க வேண்டும்," என்று ரன்தீப் குலேரியா தெரிவித்துள்ளார்.
இதற்கிடையே நாட்டில் ஓமிக்ரான் பாதிப்புக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை 153ஆக அதிகரித்துள்ளது. பதினோறு மாநிலங்களில் இப்போது ஓமிக்ரான் நோயாளிகள் கண்டறியப்பட்டுள்ளனர்.
ஆக அதிகமாக, மகாராஷ்டிராவில் 54, டெல்லியில் 22, தெலுங்கானாவில் 20, ராஜஸ்தானில் 17, கர்நாடகாவில் 14, குஜராத் - கேரளாவில் தலா 11 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
ஆந்திரா, தமிழகம், சண்டிகர், மேற்கு வங்க மாநிலங்களில் தலா ஒருவர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இதற்கிடையே தொற்று அபாயம் உள்ள நாடுகளில் இருந்து இந்தியா வருபவர்களுக்கு என புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. அவை நேற்று முதல் அமலுக்கு வந்துள்ளன.
தொற்று அபாயமுள்ள நாடுகளில் இருந்து வருவோர், டெல்லி, கோல்கத்தா, மும்பை, சென்னை, பெங்களூரு, ஹைதராபாத் விமான நிலையங்களில் தரையிறங்கிய பின்னர் பிசிஆர் பரிசோதனைக்கு உட்பட வேண்டும் என்றும் இதற்கான முன்பதிவை பயணத்துக்கும் முன்பே செய்திருக்க வேண்டும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
அவ்வாறு முன்பதிவு செய்யாமல் எந்தப் பயணியாவது இந்த ஆறு விமான நிலையங்களுக்குப் பயணம் மேற்கொள்ள முற்பட்டால் விமானத்தில் பயணிக்க அனுமதிக்கப்படமாட்டார்கள் என மத்திய சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
மேலும் தொற்று அபாயமுள்ள நாடுகளின் பட்டியலையும் அந்த அமைச்சு வெளியிட்டுள்ளது.

