ஆசியாவின் மிக மோசமாக செயல்படும் நாணயமாக இந்திய ரூபாய்

ஆசியாவின் மிக மோசமாக செயல்படும் நாணயமாக இந்திய ரூபாய்

2 mins read
d112ccc5-aed4-4546-acc5-446e5140559a
ஆசியாவின் மிக மோசமாகச் செயல்படும் நாணயமாக இந்திய ரூபாய் மாறி வருகிறது. படம்: இந்திய ஊடகம் -

ஓமிக்ரான் கிருமிப் பரவல் அச்சத்தால் உலக முதலீட்டாளர்கள் இந்திய பங்குச்சந்தையில் உள்ள தங்கள் முதலீடுகளை வேகமாக விற்று வருவதன் எதிரொலியாக, இந்திய ரூபாயின் மதிப்பு கடுமையாக சரிந்து வருகிறது.

இதனால், ஆசியாவின் மிக மோசமாகச் செயல்படும் நாணயமாக இந்திய ரூபாய் மாறி வருகிறது.

ஐரோப்பிய நாடுகளில் ஓமிக்ரான் திரிபு பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. இதனால் உலகம் முழுவதும் முதலீட்டாளர்கள் மத்தியில் கலக்கமான சூழல் நிலவுகிறது. இதன் எதிரொலியாக, கடந்த சில நாள்களாகவே இந்திய பங்குச்சந்தை சரிவை சந்தித்து வருகிறது.

ஓமிக்ரான் அச்சத்தால் வெளிநாட்டு முதலீட்டாளர்கள் இந்திய பங்குச்சந்தையில் இருந்து அதிகப்படியான முதலீடுகளை விற்பனை செய்து பணத்தை எடுத்து வருகின்றனர்.

இதனால் அன்னிய செலாவணி இருப்பும் படிப்படியாகக் குறைந்து, ரூபாயின் மதிப்பு குறைந்து வருகிறது. செவ்வாய்க்கிழமை (டிசம்பர் 21) காலை நடைபெற்ற வர்த்தகத்தில், ஓர் அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 75.63 என்ற அளவில் இருந்தது.

இது, கொரோனா தொற்றுப் பாதிப்பு கடுமையாக இருந்த கடந்த ஆண்டு ஜூலை மாத நிலவரத்துக்குச் சமம். தற்போது, ரூபாயின் மதிப்பு மீண்டும் அதே நிலையை எட்டியுள்ளதால் நாட்டின் வர்த்தகப் பற்றாக்குறையில் பெரும் இடைவெளி உருவாகும் சூழல் ஏற்பட்டுள்ளது.

இதனால், ஆசியாவின் மிக மோசமாகச் செயல்படும் நாணயமாக இந்திய ரூபாய் மாறியுள்ளது.

இந்திய பங்குச்சந்தையில் இருந்து 4.2 பில்லியன் டாலர் முதலீடு வெளியேறியுள்ளது. இதனால், இந்த காலாண்டில் மட்டும் இந்திய ரூபாய் மதிப்பு 1.9 விழுக்காடு குறைந்துள்ளது.

இந்திய ரூபாய் மதிப்பு குறித்து பொருளியல் மதிப்பீட்டு நிறுவனங்கள் பல்வேறு தரவுகளை வெளியிட்டுள்ளன. அதில், அடுத்த ஆண்டு மார்ச் மாத இறுதிக்குள் ஒரு டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு 78 ஆக குறையும் என்று கணிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு நிகழ்ந்தால் கடந்த ஆண்டு ஏப்ரலில் ஏற்பட்ட 76.90 என்ற சரிவையும்விட கூடுதலாகி விடும்.