புதுடெல்லி: விஜய் மல்லையா, நீரவ் மோடி, மெகுல் சோக்ஸி ஆகிய மூன்று தொழிலதிபர்களிடம் இருந்து இதுவரை ரூ.13,109 கோடி மதிப்புள்ள கடன் தொகை மீட்கப்பட்டுள்ளது. இத்தகவலை மத்திய நிதிஅமைச்சர் நிர்மலா சீதாராமன் மக்களவையில் தெரிவித்தார்.
இம்மூன்று தொழிலதிபர்களும் வங்கியில் கடன் பெற்று அதை திருப்பிச் செலுத்தாமல் வெளிநாட்டுக்குத் தப்பியோடியவர்கள் ஆவர்.
நாடாளுமன்ற விவாதத்தின்போது வங்கிகளின் கடன் வசூலிப்பு குறித்து நிர்மலா சீதாராமன் சில விளக்கங்களை அளித்தார். அப்போது, மேற்குறிப்பிட்ட மூன்று தொழிலதிபர்களின் சொத்துகளை விற்பனை செய்து அதன் மூலம் 13,109 கோடி ரூபாய் திரட்டப்பட்டதாக அவர் குறிப்பிட்டார்.
ஆகக்கடைசியாக, கடந்த ஜூலை மாதம் 16ஆம் தேதி விஜய் மல்லையாவுக்குச் சொந்தமான ரூ.792 கோடி சொத்து விற்பனை செய்யப்பட்டு அந்தத் தொகையானது வங்கிக் கடனுக்காக மீட்கப்பட்டதாக அவர் தெரிவித்தார்.
இந்திய வங்கிகளில் கடன்பெற்று அதை திருப்பிச் செலுத்தாமல் வெளிநாடுகளுக்கு தப்பியோடுபவர்கள் மீது கடும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.
கடந்த ஏழு ஆண்டுகளில் மட்டும் பொதுத்துறை வங்கிகள் ரூ.5.49 லட்சம் கோடி கடனை திரும்ப வசூலித்துள்ளன. கடனைச் செலுத்த முடியாதவர்களின் சொத்துகள் விற்கப்பட்டு அந்தப் பணம் வங்கிக்குச் செலுத்தப்பட்டது.
"இந்த நடவடிக்கையால் வங்கிகள் இன்று பாதுகாப்பாக உள்ளன. அதேபோல வங்கியில் முதலீடு செய்துள்ள முதலீட்டாளர்கள், வாடிக்கையாளர்கள் பணமும் பாதுகாப்பாக உள்ளது," என்றார் நிர்மலா சீதாராமன்.

