மும்பை: மும்பையைச் சேர்ந்த பதின்ம வயதினர் இருவர் இணைந்து தொடங்கிய இணையம் மூலமான துரித வணிகச் சேவையை அளிக்கும் தொடக்க நிறுவனம் ஐந்தே மாதங்களில் பெரும் வளர்ச்சி கண்டுள்ளது.
பலிச்சா, கைவல்யா ஆகிய இருவரும் ஸ்டான்ஃபோர்ட் பல்கலைக்கழகத்தில் கணினி துறை சார்ந்த படிப்பை பாதியிலேயே கைவிட்டு இந்தியா திரும்பினர்.
இதையடுத்து, 'ஸெப்டோ' என்ற பெயரில் சொந்த நிறுவனத்தைத் தொடங்கிய இருவருக்கும் தொடக்கம் முதல் ஏற்றம்தான்.
இணையம் வழி மளிகை, அத்தியாவசியப் பொருள்களை பத்து நிமிடங்களில், வீடு அல்லது தேவைப்படும் இடத்துக்கே கொண்டு வந்து கொடுக்கப்படும் என்று 'ஸெப்டோ' அளித்த வாக்குறுதிக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. மும்பையில் தொடங்கப்பட்ட இந்நிறுவனம் தற்போது மேலும் நான்கு நகரங்களில் செயல்படத் தொடங்கி உள்ளது.
மொத்தம் 2,500 பொருள்களை விநியோகிக்கும் இந்நிறுவனம் தின்பண்டங்கள், பானங்கள் போன்ற அனைத்தையும் குறித்த நேரத்தில் கொண்டு சேர்ப்பதால் வாரந்தோறும் பத்தாயிரம் புதிய வாடிக்கையாளர்கள் கிடைத்து வருகின்றனர்.
தற்போது இந்நிறுவனத்தின் முதலீடு ஐந்து மாதங்களில் இரு மடங்காக சுமார் நூறு மில்லியன் டாலராக அதிகரித்துள்ளது. மேலும், நிறுவனத்தின் மதிப்பு 570 மில்லியன் டாலராக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

