கோல்கத்தா: அண்மையில் நடந்து முடிந்த கோல்கத்தா மாநகராட்சி தேர்தலில் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணாமூல் காங்கிரஸ் கட்சி அமோக வெற்றி பெற்றுள்ளது.
தேர்தல் நடைபெற்ற 144 வார்டுகளில் 134 இடங்களை அக்கட்சி கைப்பற்றி உள்ளது.
காங்கிரசும் பாஜகவும் பெரும் பின்னடைவைச் சந்தித்துள்ளன. பாஜக மூன்று வார்டுகளிலும் காங்கிரசும் இடதுசாரிகளும் தலா இரண்டு தொகுதிகளிலும் வெற்றி பெற்றுள்ளன. மூன்று தொகுதிகளை கைப்பற்றிய சுயேட்சைகள் திரிணாமூல் கட்சியை ஆதரிக்கப் போவதாக தெரிவித்துள்ளனர்.
கோல்கத்தா மாநகராட்சித் தேர்தலுக்கான வாக்குப்பதிவு கடந்த ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இதில் 63 விழுக்காடு வாக்குகள் பதிவாகின. மொத்தம் உள்ள 144 வார்டுகளுக்கு நடைபெற்ற தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை நேற்று காலை தொடங்கியது.
இதில் தொடக்கம் முதலே பெரும்பாலான இடங்களில் ஆளும் திரிணாமூல் காங்கிரஸ் முன்னிலை வகித்தது. நேற்று மாலை நிலவரப்படி, 134 வார்டுகளை அக்கட்சி கைப்பற்றியதாக அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியானது.
இம்முறை இளையர்களுக்கும் அதிகம் படித்தவர்களுக்கும் வாய்ப்பு அளிக்கப்போவதாக பாஜக தலைமை அறிவித்திருந்தது. அதன்படி, வழக்கறிஞர்கள், பேராசிரியர்களுக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டன.
இதற்கு நேர்மாறாக திரிணாமூல் காங்கிரஸ் கட்சித் தலைமை அமைச்சர்களுக்கும் எம்எல்ஏக்களுக்கும் நெருக்கமானவர்களுக்குத்தான் வாய்ப்பு வழங்கியதாக கூறப்படுகிறது. 73வது வார்டில் முதல்வர் மம்தாவின் மருமகள் பவானிபோர் கஜாரி களமிறக்கப்பட்டார். இந்நிலையில், திரிணாமூல் காங்கிரஸ் கட்சி பெரும் வெற்றியைப் பெற்றுள்ளது. கடந்த 2015ஆம் ஆண்டு நடந்த கோல்கத்தா மாநகராட்சித் தேர்தலில் 114 வார்டுகளைக் கைப்பற்றியது திரிணமூல் காங்கிரஸ். அச்சமயம் இடதுசாரி கட்சிகள் 15, பாஜக 6, காங்கிரஸ் 5 வார்டுகளில் மட்டுமே வெற்றி பெற்றிருந்தன.
தேர்தலுக்குப் பிறகு இவர்களில் பலர் முதல்வர் மம்தாவுக்கு ஆதரவு தெரிவித்து அணிமாறிவிட்டனர். இந்த முறையும் அதே காட்சிகள் மீண்டும் அரங்கேறும் என அரசியல் கவனிப்பாளர்கள் கூறியது நடந்து வருகிறது.
இந்த வெற்றி மக்கள் தங்கள் பக்கம் இருப்பதை மீண்டும் உறுதிபடுத்தி உள்ளதாக முதல்வர் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார். காங்கிரசும் பாஜகவும் எங்கே போயின என்று மக்கள் கேட்கிறார்கள் என்றும் அவர் கூறியுள்ளார்.
தேசிய அளவில் காங்கிரஸ் கட்சிக்கு மாற்றாக திரிணாமூல் காங்கிரஸ் உருவெடுக்க வேண்டும் என முதல்வர் மம்தா பானர்ஜி விரும்புவதாகத் தெரிகிறது. அதற்கேற்ப அரசியல் சதுரங்கத்தில் அவர் காய்களை நகர்த்தி வருகிறார்.
அண்மையில் மகாராஷ்டிராவில் நடைபெற்ற சட்டமன்ற மேலவைத் தேர்தலில் ஆளும் சிவசேனா கட்சியைவிட பாஜக அதிக தொகுதிகளில் வெற்றி பெற்றது. அதே போன்று மேற்கு வங்கத்திலும் பாஜக முத்திரை பதிக்கும் என அக்கட்சியினர் கூறி வந்தனர். ஆனால், மம்தாவின் செல்வாக்கு அதை அனுமதிக்கவில்லை என்கிறார்கள் அரசியல் பார்வையாளர்கள்.
மம்தா: மக்கள் நம் பக்கம் உள்ளனர் என்பதை நிரூபிக்கும் வெற்றி இது

