லக்னோ: அடுத்த ஆண்டு சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், உத்தரப் பிரதேச மக்களை பல்வேறு 'இலவச பொருள்' அறிவிப்புகள் மூலம் அரசியல் கட்சிகள் கவர்ந்து வருகின்றன.
அந்த வகையில் அம்மாநிலத்தில் உள்ள பத்து மில்லியன் மாணவர்களுக்கு இலவச மடிக்கணினியும் விவேக (திறன்) கைபேசியும் வழங்கப்படும் என ஆளும் பாஜக அரசு அறிவித்துள்ளது.
அண்மையில் ஒரு பொதுக்கூட்டத்தில் பேசிய சமாஜ்வாடி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ், முதல்வர் யோகி ஆதித்யநாத் குறித்து கடுமையாக விமர்சித்தார். முதல்வருக்கு கைபேசி, மடிக்கணினியைப் பயன்படுத்தத் தெரியாது என்றும் கிண்டலாகக் குறிப்பிட்டார்.
இந்நிலையில் கல்லூரி இறுதியாண்டு படிக்கும் பத்து மில்லியன் மாணவர்களுக்கு மடிக்கணினியும் கைபேசியும் வழங்கும் அறிவிப்பை உத்தரப்பிரதேச அரசு வெளியிட்டுள்ளது.
மேலும், அறிவிப்பை வெளியிட்ட கையோடு, வரும் 25ஆம் தேதியே இத்திட்டம் அமலுக்கு வரும் என்றும் தெரிவித்துள்ளது. அன்று முன்னாள் பிரதமர் வாஜ்பாய் பிறந்த நாளையொட்டி முதற்கட்டமாக 100,000 மாணவர்களுக்கு இலவச கைபேசி வழங்கப்படுகிறது.

