திருவனந்தபுரம்: ஏழ்மை நிலையில் உள்ள மாணவர்கள் பள்ளியில் இருந்து இடையில் நின்றுவிடக் கூடாது என்ற அக்கறை காரணமாக, பல மாணவர்களை தமது சொந்த வாகனத்தில் பள்ளிக்கு இலவசமாக அழைத்து வருகிறார் கேரள மாநில பள்ளித் தலைமை ஆசிரியர் என்.உதயகுமார்.
கொல்லம் மாவட்டம், மேற்கு பூவத்தூர் பகுதியில் உள்ள அரசு தொடக்கப் பள்ளியில் ஏழை மாணவர்கள் சிலர் படித்து வருகின்றனர். பள்ளியில் இருந்து தொலைவில் வசிப்பதால் அம்மாணவர்களுக்கு உதவும் வகையில் வாடகை வாகனம் ஏற்பாடு செய்யப்பட்டது.
எனினும் கொரோனா நெருக்கடி காரணமாக வாகன ஓட்டுநர் சரியாகப் பணிக்கு வருவதில்லை. அதில் பயணம் செய்த வசதியற்ற மாணவர்களால் வேறு போக்குவரத்து ஏற்பாட்டைச் செய்து கொள்ள முடியவில்லை.
இதையறிந்த அப்பள்ளியின் புதிய தலைமை ஆசிரியரான உதயகுமார், ஆட்டோ ஒன்றை வாங்கி தாமே மாணவர்களை இலவசமாக பள்ளிக்கு அழைத்து வருகிறார்.
காலை 8.30 மணிக்கு கிளம்பி, பள்ளி தொடங்குவதற்குள் மாணவர்களை அழைத்து வந்துவிடுகிறார். மாலை பள்ளி முடிந்த பிறகும் அவரே மாணவர்களை வீட்டிற்கு கொண்டு போய் விடுகிறார்.
இதை தாம் சுமையாகக் கருதவில்லை என்றும் பள்ளியில் மாணவர்கள் எண்ணிக்கை குறைவதை தானும் மற்ற ஆசிரியர்களும் விரும்பவில்லை என்றும் உதயகுமார் கூறுகிறார்.
இவர் தலைமையாசிரியராகப் பணியில் சேர்ந்தபோது அப்பள்ளியில் 36 மாணவர்கள் இருந்தனர். இப்போது மாணவர் எண்ணிக்கை 154ஆக அதிகரித்துள்ளது.

