செய்திக்கொத்து

செய்திக்கொத்து

2 mins read
90b0df3b-8da8-4c11-9f84-014bbade80db
-

சரிந்தது ரூபாய் மதிப்பு: ஆசியாவில் மிக மோசமாகச் செயல்படும் நாணயம்

புதுடெல்லி: இந்திய ரூபாய் ஆசியாவில் மிக மோசமாகச் செயல்படும் நாணயமாக உள்ளது என்கிறார்கள் பொருளியல் நிபுணர்கள். அண்மைய சில தினங்களாக இந்திய பங்குச் சந்தையில் சரிவு ஏற்பட்டுள்ளது. முதலீட்டாளர்கள் தங்கள் முதலீடுகளை வேகமாக திரும்பப் பெறுவதால் ரூபாய் மதிப்பும் சரிந்துள்ளது. நேற்று காலை நிலவரப்படி, அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாய் மதிப்பு 75.63 ரூபாய் அளவில் இருந்தது. இது 2020ஆம் ஆண்டு தொற்றுப் பாதிப்பு கடுமையாக இருந்த ஜூலை மாத நிலவரமாகும்.

கர்நாடக காவல்துறையில் எட்டு திருநங்கைகளுக்கு உயர் பதவி

பெங்களூரு: எட்டு திருநங்கைகளுக்கு கர்நாடக காவல்துறையில் உயர் பதவியுடன் பணி வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி, மாநில சிறப்பு ரிசர்வ் துணை காவல் ஆய்வாளர் பதவியில் நான்கு திருநங்கைகளும் இந்திய ரிசர்வ் பட்டாலியன் பிரிவில் துணை ஆய்வாளர் பதவியில் ஒரு திருநங்கையும் நியமிக்கப்பட உள்ளனர். மேலும், தடயவியல் ஆய்வகத்தில் குற்றக்காட்சி அதிகாரிகள் பணியிடங்களில் மூன்று பணியிடங்கள் திருநங்கைகளுக்காக ஒதுக்கப்பட்டுள்ளன என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

நரவனே: பேரிடர் மேலாண்மை புதிய சவாலாக உருவெடுத்துள்ளது

புதுடெல்லி: கொரோனா நெருக்கடிக்குப் பின்னர் பேரிடர் மேலாண்மை என்பது பெரிய சவாலாக உருவெடுத்துள்ளது என ராணுவ தளபதி நரவனே தெரிவித்துள்ளார். தற்போது மீட்புக் குழுக்கள் முதலில் தங்களை பாதுகாத்துக் கொண்ட பிறகே மற்றவர்களை பாதுகாப்பது பற்றி சிந்திக்க வேண்டியதாகிவிட்டது என்று பயிலரங்கு ஒன்றில் பேசியபோது அவர் குறிப்பிட்டார். "கொரோனா நெருக்கடிக்குப் பிறகுதான் நமது பேரிடர் மேலாண்மை வழிமுறைகள் பழமையானவை, தற்போதைய சூழ்நிலைக்குப் பொருந்தாதவை எனத் தெரியவந்துள்ளது," என்றார் நரவனே.

ரஷ்யாவிடம் பெற்ற வான் பாதுகாப்பு அமைப்பு பஞ்சாப்பில் நிறுவப்பட்டது

புதுடெல்லி: ரஷ்யாவிடம் இருந்து பெற்றுள்ள 'எஸ்-400' வான் பாதுகாப்பு அமைப்பின் முதல் பிரிவை பஞ்சாப் மாநிலத்தில் நிறுவியுள்ளது இந்திய ராணுவம். இந்த அமைப்பின் மூலம் 400 கிலோ மீட்டர் தொலைவில் வரும் போர் விமானங்கள், ஏவுகணைகள், ஆளில்லா வானூர்திகளை வழிமறித்து தாக்கி அழிக்க முடியும். அமெரிக்காவின் பொருளாதார தடை எச்சரிக்கையை மீறி 40 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பில் இந்த பாதுகாப்பு அமைப்பையும் ஏவுகணைகளையும் வாங்க ரஷ்யாவிடம் இந்தியா ஒப்பந்தம் செய்துகொண்டுள்ளது.