புதுடெல்லி: இந்திய நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் ஒரு நாள் முன்னதாக நேற்றே முடிந்தது.
கடந்த 29ஆம் தேதி தொடங்கிய அந்தக் கூட்டத்தொடரின்போது ஒன்பது மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டு உள்ளதாக இரண்டு அவைகளின் தலைவர்களும் நேற்று அறிவித்தனர்.
பெண்களின் திருமண வயதை 21ஆக அதிகரிக்க வகை செய்யும் மசோதா கூட்டத்தொடரில் தாக்கல் செய்யப்பட்டது. தேர்தல் சீர்திருத்தம் உள்ளிட்ட முக்கிய மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டன.
இந்நிலையில், முன்னதாகவே கூட்டத்தொடர் முடித்துவைக்கப்பட்டது. இந்தக் கூட்டத்தொடரில் லக்கிம்பூர் கேர் வன்முறையில் மத்திய அமைச்சர் அஜய் மிஸ்ராவை பதவி நீக்கக்கோரி எதிர்க்கட்சிகள் முழக்கங்களை எழுப்பின.
குளிர்கால கூட்டத்தொடரில் 12 மாநிலங்களவை எம்பிக்கள் தற்காலிகமாக நீக்கப்பட்ட விவகாரம் தொடர்பில் தொடர்ந்து அமளி நிலவியது.
குளிர்கால கூட்டத்தொடர் பற்றி கருத்து தெரிவித்த மக்களவை மன்ற நாயகர் ஓம் பிர்லா, பல்வேறு இடையூறுகளால் மக்களவையில் 18 மணி நேரம் வீணானது என்றாலும் தேர்தல் சீர்திருத்த மசோதா உள்ளிட்ட முக்கிய மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டன என்றார்.
தேர்தல் சட்டத் திருத்த மசோதா 2021 நிறைவேறியபோது மன்றத்தில் பெரும் ரகளை அரங்கேறியது. அந்த மசோதா ஆதார் அட்டை விவரங்களை வாக்குச்சீட்டுடன் இணைக்க வழி செய்கிறது.
அந்த மசோதாவை பொறுக்குக் குழுவுக்கு அனுப்ப வேண்டும் என்று திரிணாமுல் காங்கிரஸ் குரல்கொடுத்தது. அந்தக் கட்சியின் உறுப்பினர் ஒருவர் செய்தியாளர் மேசையை நோக்கி சட்டப் புத்தகத்தை வீசி எறிந்தார். இறுதியாக குரல் வாக்கெடுப்பு மூலம் திங்கட்கிழமை மக்களவையில் மசோதா நிறைவேறியது.
மசோதாவை ஆதரித்து விளக்கம் அளித்த சட்ட அமைச்சர் கிரண் ரிஜிஜு, கள்ள வாக்குகளைப் பயன்படுத்துவோர் மட்டுமே அந்த மசோதாவை எதிர்க்கிறார்கள் என்று மன்றத்தில் கூறினார்.
பல்வேறு பரிந்துரைகளின் அடிப்படையில் பெண்ணின் திருமண வயதை 18-லிருந்து 21 ஆக உயர்த்த மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
ஆண், பெண் திருமண வயது சமமாக இருக்க வேண்டும் என்பதே இந்த மசோதாவின் நோக்கம் என இதற்காக அமைக்கப்பட்ட மத்திய அரசு குழு தெரிவித்தது. என்றாலும் இந்த மசோதாவுக்கு எதிர்ப்புக் குரலும் கிளம்பி உள்ளது.

