'ஓமிக்ரான்' கிருமிப் பரவல் குறித்து பிரதமர் மோடி எச்சரிக்கை
ஜனவரி 3 முதல் சிறார்களுக்குத் தடுப்பூசி ஜனவரி 10 முதல் மூத்த குடிமக்களுக்கு கூடுதல் தடுப்பூசி போடும் பணி தொடங்கப்படும் என்று பிரதமர் மோடி அறிவித்துள்ளார்.
புதுடெல்லி: கொவிட்-19 கிருமியி லிருந்து உருமாறிய ஓமிக்ரான் உலகம் முழுவதும் புதிய அச்சுறுத்தலை ஏற்படுத்தியிருக்கும் வேளையில் சிறார்களுக்கும் தடுப்பூசி போடப்படும் என்று பிரதமர் மோடி அறிவித்துள்ளார்.
பிரதமர் மோடி நாட்டு மக்களுக்கு ஆற்றிய உரையில் ஓமிக்ரான் கிருமி குறித்தும் எச்சரித்தார்.
"உலக நாடுகளில் ஓமிக்ரான் கிருமிப்பாதிப்பு அதிகரித்துக்கொண்டே வருகிறது. மக்கள் யாரும் பதற்றப்படாமல், விழிப்புடன் இருந்து முகக்கவசம் அணிந்து கைகளைத் தொடர்ந்து சுத்தம் செய்துகொள்ள ேவண்டும்.
"இந்தியாவில் நோயாளிகளைத் தனிமைப்படுத்த 18 லட்சம் படுக்கைகள், உயிர்வாயு வசதி கொண்ட 5 லட்சம் படுக்கைகள், 1.40 லட்சம் தீவிர சிகிச்சைப் படுக்கைகள், 90,000 குழந்தைகளுக்கான தீவிர சிகிச்சை படுக்கைகள் மற்றும் பொது சிகிச்சை படுக்கைகள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.
"மேலும் 3000க்கும் மேற்பட்ட உயிர்வாயு தயாரிக்கும் ஆலைகள் செயல்பட்டு வருகின்றன. நாடு முழுவதும் நான்கு லட்சம் உயிர்வாயு உருளைகள் விநியோகிக்கப்பட்டு வருகின்றன.
"கொரோனாவின் தீவிரம் அறிந்து இந்தியாவில் 141 கோடிக்கும் அதிகமான அளவில் தடுப்பூசி போடப்பட்டு உள்ளன," என்று திரு மோடி கூறினார்.
தடுப்பூசி போட தகுதியானவர்களில் 90 விழுக்காடுக்கு மேற்பட்டோருக்கு ஒரு முறையாவது தடுப்பூசி போடப்பட்டுள்ளதையும் அவர் சுட்டிக்காட்டினார்.
"ஜனவரி 15 முதல் 18 வயது வரையிலான சிறுவர்களுக்கு ஜனவரி 3ஆம் தேதி முதல் தடுப்பூசி போடப்படும்.
"நோய்களால் அவதிப்படுவோர் மற்றும் 60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு மருத்துவர்களின் பரிந்துரை அடிப்படையில் ஜனவரி 10ஆம் தேதி முதல் கூடுதல் (பூஸ்டர்) தடுப்பூசி போடப்படும். பூஸ்டர் தடுப்பூசி போடுவதில் முன்களப் பணியாளர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும்.
"உலகின் முதல் மரபணு தடுப்பூசி இந்தியாவுக்கும் வரவுள்ளது. மூக்கு வழியாக செலுத்தப்படும் கொரோனா தடுப்பு மருந்துகள் விரைவில் அறிமுகப்படுத்தப்பட உள்ளன," என்று பிரதமர் மோடி மேலும் தெரிவித்தார்.

