திருவனந்தபுரம்: கேரளாவில் உள்ளூர் மக்களுக்கும் வெளிமாநில ஊழியர்களுக்கும் இடையே ஏற்பட்ட மோதலில் நான்கு காவல்துறை அதிகாரிகள் காயம் அடைந்தனர், காவல்துறை வாகனம் ஒன்று தீக்கிரையானது.
கேரளா மாநிலம் கொச்சி அருகே கிழக்கம்பலம் பகுதியில் நாகாலாந்து மற்றும் மணிப்பூர் மாநிலங்களைச் சேர்ந்த 3,000க்கும் மேற்பட்ட தொழிலாளிகள் தங்கி உள்ளனர். கொச்சியில் உள்ள தனியார் நிறுவனத்தில் அவர்கள் பணியாற்றி வருகின்றனர்.
இவ்வேளையில் சனிக்கிழமை இரவு அவர்கள் கிறிஸ்மஸ் பண்டிகையை உற்சாகமாகக் கொண்டாடினர். அவர்களில் பலர் மது அருந்தி போதையில் கூச்சலிட்டுக் கொண்டிருந்தனர்.
இதனால் கோபமடைந்த உள்ளூர் மக்கள் அவர்களைக் கண்டித்தனர்.
இதனால் இரு தரப்பினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. பின்னர் கைகலப்பு மூண்டது.
அப்போது கூட்டத்தில் இருந்த சிலர் கற்களை வீசித் தாக்கியதாகவும் இச்சம்பவத்தை கைப்பேசியில் பதிவு செய்தவர்கள் அடித்து உதைக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது.
இதனால் பதற்றம் அதிகரித்தது. அப்பகுதி மக்கள் குன்னத்துநாடு காவல்துறைக்குத் தகவல் கொடுத்தனர்.
இதையடுத்து அங்கு வந்த ஆய்வாளர், உதவி ஆய்வாளர், இரண்டு காவல்துறை அதிகாரிகள் ஆகி யோர் மோதலில் ஈடுபட்டவர்களைக் கலைந்து செல்லுமாறு எச்சரித்தனர். ஆனால் காவல்துறையின் எச்சரிக்கையையும் மீறி தொழிலாளர்கள் காவல்துறையினரையும் சரமாரியாகத் தாக்கினர். மேலும் அவர்கள் வந்த ஜீப்புக்குத் தீ வைக்கப்பட்டது. அந்த வழியாக வந்த வாகனங்களும் அடித்து நொறுக்கப்பட்டன.
இதில் குன்னத்துநாடு ஆய்வாளர், உதவி ஆய்வாளர் மற்றும் 2 அதிகாரிகள் என 4 பேர் படுகாயம் அடைந்தனர். அவர்களை அக்கம்பக்கத்தினர் மீட்டு மருத்துவ மனையில் சேர்த்தனர்.
இதற்கிடையே காவல்துறை உயர் அதிகாரிகளுக்கு சம்பவம் குறித்து தகவல் தெரிவிக்கப்பட்டதால் ஆலுவா காவல்துறை உயர் அதிகாரி தலைமையில் 500க்கும் மேற்பட்ட அதிரடிப் படையினர் அங்கு குவிக்கப்பட்டனர்.
மோதலில் ஈடுபட்டவர்களை தடியடி நடத்தி காவல்துறையினர் கலைத்தனர்.
மேலும் காவல்துறை அதிகாரி களைத் தாக்கியதாகவும் வாகனங்களுக்குத் தீ வைத்ததாகவும் 100 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். பிற மாநிலத் தொழிலாளர்களின் வன்முறையால் அப்பகுதி மக்கள் அதிர்ச்சியடைந்துஉள்ளனர்.

