பாட்னா: பீகார் மாநிலத்தில் நூடல்ஸ் தயாரிக்கும் தொழிற் சாலையில் கொதிகலன் வெடித்ததில் ஆறு பேர் கொல்லப்பட்டனர்.
இதில் 12க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர்.
முஸாஃபர்பூரில் அந்தத் தொழிற்சாலையில் நேற்றுக் காலை திடீரென கொதிகலன் வெடித்தது. சம்பவம் குறித்து அறிந்த காவல்துறையினரும் தீ அணைப்புப் படையினரும் அங்கு விரைந்தனர். ஆனால் அதற்குள் தொழிலாளர்களில் ஆறு பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
காயம் அடைந்தவர்கள் உடனடியாக அருகில் உள்ள மருத்துவ மனையில் சேர்க்கப்பட்டனர்.
சம்பவத்தின்போது சுமார் 100 பேர் வேலை செய்ததாகக் கூறப் படுகிறது.
உயிரிழந்தவர்களை அடையாளம் காணும் பணி மேற்கொள்ளப்பட்டு வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனர். வெடிப்பு பயங்கரமானதாக இருந்ததாகவும் ஐந்து கிலோ மீட்டர் தூரத்துக்கு சத்தம் கேட்டதாகவும் 'லைவ் இந்துஸ்தான்' ஊடகம் தெரிவித்தது.
இந்த விபத்தில் அக்கம்பக்க கட்டடங்களும் சேதம் அடைந்ததாகக் கூறப்படுகிறது. விபத்து ஏற்பட்டதற்காக காரணம் உடனடியாகத் தெரியவில்லை. காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர். இதற்கிடையே விபத்தில் உயிரிழந்த குடும்பத்தினருக்கு இரங்கல் தெரிவித்துள்ள அம் மாநில முதல்வர் நிதீஷ்குமார், குடும்பத்துக்கு தலா நான்கு லட்ச ரூபாய் நிவாரணம் வழங்க உத்தர விட்டுள்ளார்.

