கத்தை கத்தையாக பணம்: எண்ண முடியாமல் கை அசந்த அதிகாரிகள் இயந்திரங்களை வரவழைத்தனர்

கத்தை கத்தையாக பணம்: எண்ண முடியாமல் கை அசந்த அதிகாரிகள் இயந்திரங்களை வரவழைத்தனர்

2 mins read
f6f1c437-ccdb-448c-8aaa-f414fdbe6be6
அதிகாரிகள் நடத்திய திடீர் சோதனையில் கோடி கோடியாக பணம், நகை, பத்திரங்கள் சிக்கின. படம்: இந்திய ஊடகம் -

இந்தியாவின் உத்தரப் பிரதேச மாநிலம், கான்பூரைச் சேர்ந்த தொழிலதிபர் ஒருவரது வீட்டில், இந்திய மறைமுக வரி, சுங்க வாரியம் நடத்திய திடீர் சோதனையில் கோடி கோடியாக பணம், நகை, பத்திரங்கள் சிக்கின.

அதிகாரிகளால் பணத்தை எண்ண முடியாமல் போய்விட்டதால் வங்கிகளில் இருந்து பணம் எண்ணும் இயந்திரங்கள் வரவழைக்கப்பட்டும் மொத்த பணத்தை இன்னமும் எண்ணி முடிக்கவில்லை என்று அதிகாரிகள் கூறியதாக என்டிடிவி செய்தி நிறுவனம் தெரிவித்தது.

வாசனை திரவிய துறையைச் சேர்ந்த பியூஷ் ஜெயின் என்ற அந்த தொழிலதிபருக்குச் சொந்தமான பல இடங்களில் மொத்தம் 107 கோடி ரூபாய் ரொக்கமும் சுமார் 180 கோடி ரூபாய் மதிப்புள்ள தங்கம், வெள்ளி, சொத்து பத்திரங்களும் இதுவரையில் கைபற்றப்பட்டு இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டது.

குடும்ப நகைகளை விற்று அதன் மூலம் கிடைத்த பணத்தைச் சேர்த்து வைத்ததாக அதிகாரிகளிடம் பியூஷ் ஜெயின் கூறியதாகவும் ஆனால் அதற்கான ஆதாரங்களைக் கொடுக்க அவரால் முடியவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டது.

பியூஷ் ஜெயினுக்குச் சொந்தமான மூதாதையர் வீட்டில் 18 ரகசியப் பெட்டகங்கள் இருந்தன.

அவற்றைத் திறக்க 500 சாவிகளைக் கொண்ட சாவிக்கொத்தும் இருந்ததாகத் தகவல்கள் கூறின.

அதிகாரிகளின் சோதனையும் அவரிடம் இருந்து கைப்பற்றப்பட்ட பொருட்களை வகைப்படும் பணிகளும் தொடர்ந்து நடந்து வருவதாக அதிகாரிகளை மேற்கோள்காட்டி என்டிடிவி கூறியது.

தொழிலதிபருக்குச் சொந்தமான பல இடங்களிலும் இரவு, பகலாக 120 மணி நேரம் சோதனை நடந்ததாகவும் 16 சொத்துகளும் அவற்றின் ஆவணங்களும் கைப்பற்றப்பட்டதாகவும் அதிகாரிகள் மேலும் கூறினர். அந்தச் சொத்துகள் கான்பூர், கனோஜ், மும்பை, புதுடெல்லி நகர்களில் உள்ளன.

பியூஷ் ஜெயின் 40க்கும் மேற்பட்ட நிறுவனங்களை நடத்தி வருவதாகவும் அதிகாரிகள் அவரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள் என்றும் ஊடகங்கள் மேலும் தெரிவித்தன.