வாரணாசி: பிரதமர் நரேந்திர மோடியின் வாரணாசி தொகுதி உட்பட வட மாநிலங்களின் பல்வேறு பகுதிகளில் தீவிர இந்து இயக்கங்களைச் சேர்ந்தவர்கள் கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்களுக்கு இடையூறு செய்ததாக இந்திய ஊடகங்களை மேற்கோள் காட்டி 'ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்' ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.
அந்த குழுக்களைச் சேர்ந்தவர்கள் ஹரியானா மாநிலம் அம்பாலா பகுதியில் ஆளுயர இயேசு கிறிஸ்துவின் சிலையை சேதப்படுத்தினார்கள் என்று 'தி ஹிந்து' நாளேடு தெரிவித்துள்ளது.
இதேபோல், வாரணாசியில் உள்ள ஒரு தேவாலயத்துக்கு வெளியே திரண்ட அக்குழுவினர் 'சான்டாகிளாஸ்' உருவப் பொம்மைகளை எரித்ததுடன், மதமாற்றம் தொடர்பாகவும் கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்களுக்கு எதிராகவும் முழக்கங்களை எழுப்பினர்.
இது தொடர்பாக மத்திய, மாநில அரசுகள் இதுவரை கருத்து ஏதும் தெரிவிக்கவில்லை.
இதற்கிடையே, கிழக்கு அசாம் பகுதியில் உள்ள தேவாலயத்திற்குள் புகுந்த, பஜ்ரங் தள் ஆதரவாளர்கள் என்று தங்களை கூறிக்கொண்ட சிலர் கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்களுக்கு இடையூறு ஏற்படுத்தினர்.
இதையடுத்து, இத்தகைய சம்பவங்களைத் தடுக்க வேண்டும் என பாஜக ஆளும் மாநிலங்களுக்கு பிரதமர் மோடி உத்தரவிட வேண்டும் என காங்கிரஸ் கூறியுள்ளது.
ஹரியானா, ஹைதராபாத்தில் நிகழ்ந்துள்ள சம்பவங்களுடன் தொடர்புடையவர்களை கைது செய்ய வேண்டும் என முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் வலியுறுத்தி உள்ளார்.