செய்திக்கொத்து

செய்திக்கொத்து

3 mins read
eda4e4a9-af48-4e89-99c5-8804e0427051
-

ஏடிஎம் இயந்திரத்தை வெடிவைத்து தகர்த்து ரூ.17 லட்சம் கொள்ளை

மும்பை: ஏடிஎம் மையத்துக்குள் புகுந்து அங்கிருந்த இயந்திரத்தை வெடிவைத்து தகர்த்து 17 லட்சம் ரூபாய் பணத்தை ஒரு கும்பல் கொள்ளையடித்துச் சென்ற சம்பவம் புனே நகர மக்களை அதிர்ச்சியடைய வைத்துள்ளது. இந்தச் சம்பவம் நேற்று முன்தினம் அதிகாலை வேளையில் நிகழ்ந்தது. புனே அருகில் உள்ள அலண்டி நகர் பகுதியில் தனியார் வங்கியின் ஏடிஎம் மையம் உள்ளது. அதிகாலை நேரத்தில் அங்கு வந்த கொள்ளையர்கள், அங்கிருந்த இயந்திரத்தை ஜெலட்டின் குச்சிகளை வெடிக்கச் செய்து தகர்த்தனர். பின்னர் அதில் வைக்கப்பட்டிருந்த சுமார் ரூ.17 லட்சம் ரொக்கப் பணத்துடன் அக்கும்பல் தப்பிச்சென்றதாகவும் அவர்களுக்கு வலைவீசப்பட்டுள்ளதாகவும் காவல்துறை தெரிவித்துள்ளது. புனேவில் கடந்த ஜூலை மாதமும் இதேபோன்ற கொள்ளைச் சம்பவம் அரங்கேறியது. அப்போது ரூ.28 லட்சம் கொள்ளையடிக்கப்பட்டது.

ரூ.72 கோடி மதிப்புள்ள போதைப்பொருள் பறிமுதல்: வெளிநாட்டுப் பெண் கைது

புதுடெல்லி: துபாயில் இருந்து பத்து கிலோ எடையுள்ள போதைப்பொருளை கடத்தி வந்த கினியா நாட்டுப் பெண் டெல்லி விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டார். அவரிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட போதைப்பொருள்களின் அனைத்துலகச் சந்தை மதிப்பு ரூ.72 கோடி என மதிப்பிடப்பட்டுள்ளது. எத்தியோப்பாவைச் சேர்ந்த அவர், முதலில் துபாய் சென்று, பின்னர் டெல்லி வந்துள்ளார். அவரது நடவடிக்கைகளால் சந்தேகம் அடைந்த விமான நிலைய சுங்கத்துறை அதிகாரிகள் அவரது உடைமைகளைத் தீவிரமாகச் சோதனையிட்டபோது, போதைப்பொருள் மறைத்து வைக்கப்பட்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. அவருக்கு இந்தியாவில் உள்ள தொடர்புகள் குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது. 'இன்டர்போல்' எனப்படும் அனைத்துலக காவல் அமைப்பு அளித்த தகவலின் பேரில், அவர் கைது செய்யப்பட்டதாகவும் கூறப்படுகிறது.

கொரோனா நெருக்கடியிலும் புதிய திட்டங்கள்: பிரதமர் மோடி பெருமிதம்

இம்பால்: கொரோனா நெருக்கடி வேளையிலும் வளர்ச்சித் திட்டங்களை எந்தவித தடையும் இல்லாமல் மத்திய அரசு நிறைவேற்றி வருவதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். இமாச்சலப் பிரதேசத்தில் 11,000 கோடி ரூபாய் மதிப்பில் புதிய நீர்மின் திட்டத்துக்கு அடிக்கல் நாட்டும் நிகழ்வில் பேசிய அவர், அனைத்து திட்டங்களும் மக்களைச் சென்றடைய மத்திய அரசு கடுமையாக உழைத்துக் கொண்டிருப்பதாக குறிப்பிட்டார். "ஒரு மாநிலத்திற்கு இரண்டு வகையான வளர்ச்சி மாதிரிகள் உள்ளன. ஒன்று, 'அனைவருக்குமான அரசு, அனைவருக்குமான வளர்ச்சி, அனைவர் மீதான நம்பிக்கை' என்ற கொள்கையை அடிப்படையாக கொண்டது. மற்றொன்று 'சுயநல அரசு, குடும்ப நல அரசு' என்ற கொள்கையைக் கொண்டது. இமாச்சலப் பிரதேசத்தில் முதல் கொள்கையின் அடிப்படையில் நிறைய வளர்ச்சித் திட்டங்களை பாஜக அரசு செயல்படுத்தி வருகிறது," என்றார் பிரதமர் மோடி.

மருத்துவத்துறை: கேரளா முதலிடம்; உத்தரப் பிரதேசத்துக்கு கடைசி இடம்

புதுடெல்லி: நாடு தழுவிய அளவில் மருத்துவத் துறை செயல்பாடுகளில் கேரள மாநிலம் முதலிடத்தைப் பிடித்துள்ளது. மத்திய அரசின் நிதி ஆயோக் அமைப்பு வெளியிட்ட சுகாதார குறியீடு தொடர்பான பட்டியலில் தமிழகத்துக்கு இரண்டாம் இடம் கிடைத்துள்ளது. பாஜக ஆளும் உத்தரப் பிரதேச மாநிலம் மோசமான சுகாதாரச் சேவைகளைக் கொண்டுள்ளதாகக் குறிப்பிட்டு கடைசி இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளது. அதே சமயம் ஒவ்வொரு ஆண்டும் மருத்துவத் துறையில் செயல்திறனை அதிகப்படுத்தும் மாநிலங்களில் கடந்த 2018-19ம் ஆண்டை அடிப்படையாக வைத்துப் பார்க்கும்போது, உத்தரப் பிரதேசம் முதலிடத்தில் இருப்பதாக நிதி ஆயோக் குறிப்பிட்டுள்ளது. தெலுங்கானா மாநிலம் ஒட்டுமொத்தத்தில் மூன்றாவது இடத்திலும் அதிகரிக்கும் செயல்திறனிலும் மூன்றாவது இடத்தைப் பிடித்துள்ளது. சுகாதாரக் குறியீடு என்பது 24 வகையான தரங்களை அடிப்படையாக வைத்து ஒட்டுமொத்த செயல்திறனை மதிப்பீடு செய்வதாகும்.

அன்னை தெரேசா அறக்கட்டளை வங்கிக் கணக்குகள் முடக்கம்: மம்தா அதிர்ச்சி

கோல்கத்தா: அன்னை தெரேசா அறக்கட்டளையின் வங்கிக் கணக்குகளை மத்திய அரசு முடக்கி உள்ளதால் 22 ஆயிரத் துக்கும் மேற்பட்ட ஊழியர்கள், நோயாளிகள் மருந்துகள் இன்றி தவிப்புக்கு ஆளாகி உள்ளதை அறிந்து தாம் அதிர்ச்சி அடைந்ததாக மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி கூறியுள்ளார். கிறிஸ்துமஸ் தினத்தன்று மத்திய அரசு இவ்வாறு நடவடிக்கை எடுத்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.