2,500 மருத்துவர்கள் கைதாகி விடுதலை; நாடு தழுவிய போராட்டத்துக்கு அழைப்பு
புதுடெல்லி: மருத்துவ மேற்படிப்புக்கான கலந்தாய்வை உடனடியாக நடத்த வலியுறுத்தி பயிற்சி மருத்துவர்கள் டெல்லியில் நேற்று முன்தினம் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதனால் அங்குள்ள அரசு மருத்துவமனைகளில் புறநோயாளிகள் பிரிவு மூடப்பட்டது. நோயாளிகள் பலர் சிகிச்சை பெற முடியாமல் தவிப்புக்கு ஆளாகினர்.
போராட்டத்தில் ஈடுபட்ட பயிற்சி மருத்துவர்களை காவல்துறையினர் குண்டுக்கட்டாக அப்புறப்படுத்தியதால் இருதரப்புக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. அப்போது ஏழு காவலர்கள் காயமடைந்ததாகக் கூறப்படுகிறது.
நீதிமன்ற வழக்கு காரணமாக மருத்துவ முதுநிலை கலந்தாய்வு நிறுத்திவைக்கப்பட்டுள்ளது. இதற்கு பயிற்சி மருத்துவர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
நேற்று முன்தினம் டெல்லியில் உள்ள ஷாஹீன் பூங்காவில் இருந்து உச்ச நீதிமன்றத்தை நோக்கி பயிற்சி மருத்துவர்கள் பேரணியாகச் செல்ல முயன்றனர். அப்போது காவல்துறையினர் அவர்களைத் தடுத்து நிறுத்தினர். அப்போது முன்வரிசையில் இருந்த மருத்துவர்கள் குண்டுக்கட்டாக அப்புறப்படுத்தப்பட்ட போது இருதரப்புக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. அங்கிருந்த வாகனங்களின் கண்ணாடிகள் உடைக்கப்பட்டன.
இதையடுத்து, காவலர்களைப் பணி செய்ய விடாமல் தடுத்ததாகக் கூறி 12 மருத்துவர்கள் கைது செய்யப்பட்டனர். மேலும், பேரணியாகச் செல்ல முயன்ற மருத்துவர்களும் அங்கிருந்து அப்புறப்படுத்தப்பட்டனர்.
இது குறித்து தகவல் அறிந்த டெல்லி முழுவதும் உள்ள மருத்துவர்கள், வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர். நேற்று முன்தினம் இரவு சுமார் நான்காயிரம் மருத்துவர்கள் டெல்லி சரோஜினி நகர் காவல் நிலையத்தை முற்றுகையிட்டு மத்திய அரசுக்கு எதிராக கண்டன முழக்கங்களை எழுப்பினர்.
மேலும், கைது செய்யப்பட்டு அக்காவல் நிலையத்தில் வைக்கப்பட்டிருந்த 12 மருத்துவர்களை விடுவிக்கவும் வலியுறுத்தி தேசிய கீதத்தைப் பாடினர்.
பயிற்சி மருத்துவர்கள் மீது காவல்துறையினர் தடியடி நடத்தியதாகவும் இது தொடர்பாக நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்றும் இந்திய மருத்துவக் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.
மேலும், நாடு தழுவிய அளவில் மருத்துவர்களின் வேலை நிறுத்தப் போராட்டத்துக்கும் அழைப்பு விடுத்துள்ளது.
மருத்துவ மேற்படிப்புக்கான கலந்தாய்வு தாமதமாவதால் பல்வேறு வகைகளில் தங்களுக்குப் பாதிப்பு ஏற்படுவதாக பயிற்சி மருத்துவர்கள் கூறியுள்ளனர்.
கடந்த ஒரு மாத காலமாக வெவ்வேறு வகையில் போராட்டங்களில் ஈடுபட்டு வந்த மருத்துவர்கள் நேற்று முன்தினம் உச்ச நீதிமன்றத்தை நோக்கி பேரணியாகச் செல்ல முயன்றனர்.
போராட்டத்தில் ஈடுபட்ட 2,500 மருத்துவர்கள் கைது செய்யப்பட்டு நள்ளிரவில் விடுவிக்கப்பட்டதாக ஊடகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும், பல மருத்துவர்கள் தங்களது கைபேசிகளை காவலர்கள் பறித்துக்கொண்டதாக புகார் எழுப்பியுள்ளனர்.
போராட்டத்தின்போது பெண் மருத்துவர்களை காவலர்கள் குண்டுக்கட்டாகத் தூக்கிச் சென்றபோது சில மருத்துவர்கள் அதை கைபேசியில் காணொளியாகப் பதிவு செய்ய முயன்றனர். இதையடுத்து, அவர்களது கைபேசிகள் பறிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.

