பெங்களூரு: கர்நாடகாவில் காலியாக உள்ள 115 உள்ளாட்சி அமைப்புகளுக்கான வாக்குப்பதிவு நேற்று முன்தினம் நடைபெற்றது. தேர்தலில் பதிவான வாக்குகள் நாளை எண்ணப்படுகின்றன.
வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்றது என்றும் பெரிய அசம்பாவித சம்பவங்கள் ஏதுமின்றி தேர்தல் அமைதியாக நடந்து முடிந்தது என்றும் மாநிலத் தேர்தல் அதிகாரி தெரிவித்துள்ளார்.
கர்நாடகாவில் காலியாக உள்ள ஐந்து நகர சபைகள், 19 புற சபைகள், 34 பட்டணப் பஞ்சாயத்து என்று மொத்தம் 58 நகர உள்ளாட்சி அமைப்புகளுக்கும் 57 கிராமப் பஞ்சாயத்துகளுக்கும் என மொத்தம் 115 உள்ளாட்சி அமைப்புகளுக்கு நேற்று முன்தினம் தேர்தல் நடைபெற்றது. மொத்தம், 2,063 வார்டுகளில் வாக்குகள் பதிவாகின. 4,000 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர்.
வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்றதாகவும் பொதுமக்கள் ஆர்வத்துடன் நீண்ட வரிசைகளில் காத்திருந்து வாக்களித்ததாகவும் ஊடகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
அண்மையில் மகாராஷ்டிரா மேலவையில் காலியாக உள்ள இடங்களுக்கு நடைபெற்ற தேர்தலில் பாஜக அதிக இடங்களைக் கைப்பற்றியது. மேற்கு வங்கத்தில் கோல்கத்தா மாநகராட்சிக்கு நடைபெற்ற தேர்தலில் ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் வெற்றி பெற்றது. சண்டிகர் மாநகராட்சித் தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி முத்திரை பதித்துள்ளது.
இந்நிலையில், கர்நாடக உள்ளாட்சித் தேர்தல் முடிவுகள் அரசியல் களத்தில் எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தி உள்ளன.

