13 முக்கிய நகரங்களில் '5ஜி' சேவை
புதுடெல்லி: அடுத்த ஆண்டு நாடு முழுவதும் உள்ள 13 முக்கிய நகரங்களில் '5ஜி' சேவை வழங்கப்பட உள்ளதாக மத்திய தகவல் தொலைத்தொடர்புத் துறை தெரிவித்துள்ளது. குருகிராம், பெங்களூரு, கோல்கத்தா, மும்பை, சென்னை, சண்டிகர், டெல்லி, ஜாம்நகர், அகமதாபாத், ஹைதராபாத், லக்னோ, புனே, காந்தி நகர் ஆகிய நகரங்களில் நாட்டிலேயே முதன்முறையாக '5ஜி' சேவை அளிக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. வெள்ளோட்டத்திற்கான மையங்களைத் தயாராக வைத்திருப்பதாகவும் தொலைத்தொடர்புத் துறை கூறியுள்ளது.
வெறுப்புணர்வைத் தூண்டும் பேச்சு: பாகிஸ்தான் கண்டனம்
புதுடெல்லி: இந்து சமய துறவிகள் பங்கேற்ற மாநாட்டில் இஸ்லாமியர்களுக்கு எதிரான வெறுப்புணர்வைத் தூண்டும் வகையில் சிலர் பேசியதற்கு பாகிஸ்தான் கண்டனம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக பாகிஸ்தானில் உள்ள இந்திய தூதரை நேரில் அழைத்து அந்நாட்டு வெளியுறவு அமைச்சு தனது கவலையை வெளிப்படுத்தி உள்ளது.
வெறுப்புணர்வுப் பேச்சு தொடர்பாக இந்திய அரசாங்கமோ, அக்குறிப்பிட்ட நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களோ வருத்தம் தெரிவிக்காதது கண்டிக்கத்தக்கது என பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சு அறிக்கை ஒன்றில் குறிப்பிட்டுள்ளது.
வேளாண் பணிகள் மூலம் ஐந்து மில்லியன் வேலை வாய்ப்புகள்
புதுடெல்லி: வேளாண்மை பணிகளில் ஆளில்லா சிறிய ரக வானூர்திகளைப் பயன்படுத்துவதன் மூலம் ஐந்து மில்லியன் வேலை வாய்ப்புகளை உருவாக்க இயலும் என மத்திய சாலை போக்குவரத்து அமைச்சர் நிதின் கட்காரி தெரிவித்துள்ளார். குறிப்பாக, கிராமப்புறங்களில் வேலை வாய்ப்பு அதிகரிக்கும் என்று நாக்பூரில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசும்போது அவர் குறிப்பிட்டார். மேலும், பேட்டரியால் இயக்கப்படும் ஒரு சிறிய ரக வானூர்தியின் விலை ஆறு லட்சம் ரூபாய் என்றும் அதை இயக்குவதற்கு நிபுணர்கள் தேவைப்படுவார்கள் என்பதால் வேலைவாய்ப்பு அதிகரிக்கும் என்றும் அமைச்சர் தெரிவித்தார்.
தெரசா அறக்கட்டளை: மத்திய அரசு வங்கிக்கணக்கை முடக்கவில்லை
கோல்கத்தா: அன்னை தெரசா அறக்கட்டளையில் வங்கிக் கணக்குகளை மத்திய அரசு முடக்கவில்லை என அதன் நிர்வாகம் தெரிவித்துள்ளது. அந்நிய பணப்பரிவர்த்தனைக்கான சான்றிதழைப் புதுப்பிப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாகவும் அதற்கு தீர்வு காணப்படும் வரை வங்கிக்கணக்கை முடக்கும்படி மத்திய உள்துறை அமைச்சிடம் அறக்கட்டளையே கேட்டுக்கொண்டதாகவும் அந்நிர்வாகம் விளக்கம் அளித்துள்ளது. மேலும், தங்கள் அமைப்பு தெடர்ந்து செயல்பட மத்திய அரசு எந்தத் தடையும் விதிக்கவில்லை என்று அன்னை தெரசா அறக்கட்டளை கூறியுள்ளது.
காஷ்மீரில் வீடு, தங்குவிடுதிகள் கட்ட ஒப்பந்தம்: எதிர்க்கட்சிகள் கண்டனம்
ஸ்ரீநகர்: காஷ்மீரில் பிற மாநிலங்களைச் சேர்ந்தவர்களும் நிலம் வாங்குவதற்கு ஏற்ப சட்டத் திருத்தம் செய்யப்பட்டதை அடுத்து, அங்கு நேற்று முன்தினம் முதன்முறையாக 'ரியல் எஸ்டேட்' மாநாடு நடைபெற்றது. இந்நிலையில், அங்கு தங்குவிடுதிகள், வீடுகள் கட்டுவது தொடர்பாக அரசுடன் தனியார் நிறுவனங்கள் ரூ.18,300 கோடி மதிப்புள்ள 39 ஒப்பந்தங்களைச் செய்து கொண்டுள்ளன. இதன் மூலம் காஷ்மீரில் பொருளாதாரம் மேம்படுவதுடன், வேலை வாய்ப்புகள் அதிகரிக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில், காஷ்மீரின் வளங்கள் விற்பனை செய்யப்படுவதாக முன்னாள் முதல்வர்கள் உமர் அப்துல்லா, மெகபூபா முஃப்தி உள்ளிட்டோர் கண்டனம் தெரிவித்துள்ளனர். இத்தகைய நடவடிக்கைகள் தடுத்து நிறுத்தப்பட வேண்டும் என எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி உள்ளன.

