புதுடெல்லி: பிரதமர் மோடி பயன்படுத்தும் காரின் விலை 12 கோடி ரூபாய் என்றும் அதில் பல்வேறு நவீன பாதுகாப்பு அம்சங்கள் உள்ளன என்றும் தெரிய வந்துள்ளது.
மெர்சிடிஸ் நிறுவனத் தயாரிப்பான அந்த கார், 'மேபேக் எஸ் 650' ரகத்தைச் சேர்ந்தது என்றும்
துப்பாக்கி குண்டுகளால் துளைக்க முடியாத அளவுக்கு உறுதி வாய்ந்தது என்றும் இணையதளம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
மெர்சிடிஸ் மேபேக் எஸ் 650 வகை கார்களில் இரட்டை இன்ஜின்கள் உள்ளன. அதிகபட்சமாக, மணிக்கு 160 கிலோமீட்டர் வேகத்தில் செல்லக்கூடிய இந்த காருக்கு அருகே சுமார் இரண்டு மீட்டர் தொலைவில் 15 கிலோ வெடிபொருள்கள் ஒருசேர வெடித்தாலும் கூட, காரில் இருப்பவர்களுக்கு பாதிப்பு ஏற்படாது என்று கூறப்படுகிறது. மேலும், நேரடியாக அந்த கார் மீது வெடிகுண்டு வீசித் தாக்குதல் நடத்தினாலும் கூட, சேதமடையாத வகையில் பாதுகாப்பு அம்சங்கள் இடம்பெற்றுள்ளன.
நச்சுவாயு கொண்டு தாக்குதல் நடத்தப்படும் பட்சத்தில், அந்த வாயு காருக்குள் புகாதவாறு தடுத்துவிட முடியும்.
எந்தவிதமான தீ விபத்தும் ஏற்படாத வகையில் காரின் எரிபொருள் நிரப்பும் கலனில் சிறப்பு ரசாயனக் கலவை பூசப்பட்டுள்ளது. மேலும் அந்தக் கலனில் எதிர்பாராத விதமாக ஏதேனும் துளை ஏற்பட்டால், அது தானாகவே மூடிக்கொள்ளும். இதுபோன்ற உலோகம் போயிங் விமானத்தில் மட்டுமே பயன்படுத்தப்படும் என்கிறார்கள் நிபுணர்கள்.
இந்த நவீன காரின் சக்கரங்களுக்கு எந்தவிதப் பாதிப்பும் ஏற்படாத வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதற்கு முன்பு ரேஞ்ச் ரோவர் வோக், டொயோட்டாவின் லேண்ட் க்ரூசர் ஆகிய கார்களை பயன்படுத்தி வந்தார் பிரதமர் மோடி.

