விமானங்களில் இந்திய இசை

விமானங்களில் இந்திய இசை

1 mins read
dc6d6a96-8a2b-4d72-9904-764b168c2f91
அமெரிக்காவின் சிக்காகோவில் உள்ள விமான நிலையத்தில் நிறுத்திவைக்கப்பட்டுள்ள ஏர் இந்தியா விமானம். படம்: ராய்ட்டர்ஸ் -

விமானங்களிலும் விமான நிலைய வளாகங்களிலும் இந்திய இசையை ஒலிக்கச் செய்வது குறித்து விமான நிறுவனங்களும் விமான நிலையங்களும் பரிசீலிக்க வேண்டும் என்று இந்திய விமானப் போக்குவரத்து அமைச்சு கேட்டுக்கொண்டுள்ளது.

இந்திய விமான நிறுவனங்கள் இயக்கும் விமானங்களில் இந்திய இசையை ஒலிக்கச் செய்வதற்கு ஆவன செய்யுமாறு விமானப் போக்குவரத்துத் துறை அமைச்சா் ஜோதிராதித்ய சிந்தியாவிடம் இந்திய கலாசார உறவுகள் மன்றம் கடந்த டிசம்பர் 23ஆம் தேதி கோரிக்கை விடுத்திருந்தது.

இந்நிலையில், இந்திய விமான நிறுவனங்களுக்கும் விமான நிலையங்களுக்கும் விமானப் போக்குவரத்து அமைச்சு திங்கட்கிழமை அனுப்பிய கடிதத்தில், ''அமெரிக்க நிறுவனங்களின் விமானங்களில் அந்நாட்டின் ஜாஸ் இசை ஒலிக்கப்படுகிறது. ஆஸ்திரிய நிறுவனங்களின் விமானங்களின் அந்நாட்டின் மொஸாா்ட் இசையும் மத்திய கிழக்கு நாடுகளைச் சோ்ந்த நிறுவனங்கள் இயக்கும் விமானங்களில் அரபு இசையும் ஒலிக்கப்படுகிறது. ஆனால், இந்திய விமான நிறுவனங்கள் இயக்கும் விமானங்களில் எப்போதாவதுதான் இந்திய இசை ஒலிக்கப்படுகிறது.

"இந்தியாவில் சமூக, சமய வாழ்வின் ஓர் அங்கமாக இசையின் பயணம் தொடங்கியது. இந்திய இசைக்கு வளமான பாரம்பரியமும் கலாசாரமும் உள்ளது. இந்தியப் பாரம்பரிய இசைக்கு பன்முகத்தன்மை உள்ளது. எனவே, விமானங்களிலும் விமான நிலைய வளாகங்களிலும் இந்திய இசையை ஒலிக்கச் செய்வது குறித்து பரிசீலிக்க வேண்டும்,'' என்று கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.