உத்தரகாண்ட் மாநிலத்தில் பிரதமர் மோடி தொடங்கிவைத்தார்
டேராடூன்: உத்தரகாண்ட் மாநிலத் திற்கு நேற்று வருகையளித்த பிரதமர் மோடி, ரூ.17,500 கோடி மதிப்புஉள்ள வளர்ச்சிப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார்.
அந்த மாநிலத்தில் 70 இடங்களை கொண்ட சட்டசபைக்கு அடுத்த ஆண்டு பிப்ரவரியில் தேர்தல் நடக்கிறது.
இதில், பாஜக, காங்கிரஸ் உள்ளிட்ட முக்கிய கட்சிகள் போட்டியிட உள்ளன.
ஆட்சியை தக்கவைத்துக்கொள்ள பாஜகவும் ஆட்சியைக் கைப்பற்ற காங்கிரசும் தீவிர முயற்சியில் ஈடுபட்டு வருகின்றன. இதனால் தேர்தல்களம் சூடு பிடிக்கத் தொடங்கியுள்ளது.
திரிணாமுல் காங்கிரஸ் மற்றும் ஆம் ஆத்மி உள்ளிட்ட கட்சிகளும் உத்தரகாண்ட் சட்டசபை தேர்தலில் களமிறங்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றன.
இதற்கிடையில், தேர்தல் நெருங்கி வரும் நிலையில் பல்வேறு வளர்ச்சித் திட்டப்பணிகளை பாஜக அரசு மேற்கொண்டு வருகிறது.
இந்த நிலையில் உத்தரகாண்டில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள பிரதமர் மோடி, அம்மாநிலத்தில் நேற்று 17,500 கோடி ரூபாய் மதிப்பிலான வளர்ச்சி திட்டப்பணி களுக்கு அடிக்கல் நாட்டினார்.
அம்மாநிலத்தின் நைனிதல் மாவட்டம் ஹல்ட்வானி பகுதியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய அவர், இந்த 10 ஆண்டு காலத்தை உத்தரகாண்ட் மாநிலத்திற்கானதாக மாற்றுவதில் அரசு கவனமாக உள்ளது என்றார். வெவ்வேறு வளர்ச்சி திட்டப் பணிகள் மூலம் இதை சாத்தியப்படுத்த உள்ளோம். இந்த 10 ஆண்டுகளை உத்தரகாண்ட் மாநிலத்திற்கான 10 ஆண்டாக மாற்ற மாநில மக்களுக்கு திறமை உள்ளது' என்றார்.

