ஓராண்டில் 126 புலிகள் பலி
புதுடெல்லி: இந்தியாவில் இவ்வாண்டில் நாடு முழுவதும் 126 புலிகள் உயிரிழந்துள்ளன என்று தேசிய புலிகள் பாதுகாப்பு ஆணையம் வெளியிட்டுள்ள தரவுகள் தெரி விக்கின்றன. இதில் புலிகள் காப்பகம் என வரை யறுக்கப்பட்ட பகுதிக்கு வெளியே 61 புலிகளும் புலிகள் காப்பகம் என அறிவிக்கப்பட்ட இடத்திற்கு உள்ளே 65 புலிகளும் உயிரிழந்துள்ளன. மேலும் உயிரிழந்த மொத்த புலிகளில் 44 புலிகள் இளம் வயது புலிகள் ஆகும். உயிரிழந்த மொத்த புலிகளில் 35 புலிகள் இளம் வயது பெண் புலிகள் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. தமிழகத்தில் மட்டும் கடந்த ஓராண்டில் 4 புலிகள் உயிரிழந்துள்ளன.
கிடாம்பி ஸ்ரீகாந்துக்கு
ஐந்து ஏக்கர் நிலம் பரிசு
அமராவதி: இந்தியாவின் பூப்பந்து விளையாட்டாளரான ஆந்திராவைச் சேர்ந்த கிடாம்பி ஸ்ரீகாந்த், அண்மையில் ஸ்பெயினில் நடந்த உலக சாம்பியன்ஷிப் போட்டியில் வெள்ளிப்பதக்கத்தைக் கைப்பற்றி வரலாறு படைத்தார். இதே போட்டியில்தான் சிங்கப்பூரின் லோ கியன் யிவ்விடம் தோல்வி அடைந்து தங்கப்பதக்கத்தை அவர் பறிகொடுத்தார். இருந்தாலும் உலக பூப்பந்துப் போட்டியில் வெள்ளிப்பதக்கம் வென்ற முதல் இந்திய வீரரான கிடாம்பி ஸ்ரீகாந்தை ஆந்திர மாநில முதல்வரான ஜெகன்மோகன் ரெட்டி நேற்று முன்தினம் நேரில் அழைத்துப் பாராட்டினார்.
அவருக்கு ரூ.7 லட்சம் ஊக்கத்தொகையும் திருப்பதியில் பூப்பந்துப் பயிற்சி பள்ளியை அமைக்க ஐந்து ஏக்கர் நிலமும் ஒதுக்கப்படும் என்று அவர் அறிவித்தார். ஆந்திராவில் உதவி ஆட்சியராகப் பணியாற்றும் ஸ்ரீகாந்த், தனக்கு எல்லாவிதமான உதவிகளையும் செய்வதாக முதல்வர் உறுதி அளித்ததாகவும், திருப்பதியில் உலகத்தரம் வாய்ந்த பூப்பந்து பயிற்சி கல்லூரியை உருவாக்குவேன் என்றும் கூறினார்.

