இந்தியப் பொருளியல் கண்காணிப்பு மையம் வெளியிட்ட புள்ளிவிவரம்
புதுடெல்லி: இந்தியாவில் வேலைவாய்ப்பின்மை விகிதம் கடந்த நான்கு மாதங்களில் இல்லாத அளவு அதிகரித்துள்ளது.
கடந்த நவம்பர் மாதம் 7.0 விழுக்காடாக இருந்த வேலைவாய்ப்பின்மை விகிதம் டிசம்பர் மாதம் 7.9 விழுக்காடாக அதிகரித்துள்ளது என்று இந்திய பொருளாதார கண்காணிப்பு மையத்தின் தரவுகள் மூலம் தெரியவந்துள்ளது.
ஓமிக்ரான் பாதிப்புப் பரவல், சமூக இடைவெளி உள்ளிட்ட கட்டுப்பாடுகள், பல மாநிலங்களில் இரவு ஊரடங்கு உத்தரவு ஆகியவற்றின் காரணமாக பொருளியல் நடவடிக்கைகள் பாதிக்கப்பட்டதாகவும் அதன் எதிரொலியாக வேலைவாய்ப்பின்மை அதிகரித்துள்ளதாகவும் அம்மையம் கூறியுள்ளது.
இந்தியாவில் கடந்த ஆகஸ்ட் மாதம் வேலைவாய்ப்பின்மை விகிதம் 8.3 விழுக்காடாக இருந்ததாக ராய்ட்டர்ஸ் செய்தியறிக்கை தெரிவிக்கிறது.
நகர்ப்புறங்களில் வேலை வாய்ப்பின்மை விகிதம் கடந்த டிசம்பர் மாதம் 8.2 விழுக்காடாக இருந்த நிலையில், தற்போது அது 9.3% ஆக ஏற்றம் கண்டுள்ளது.
இதே வேளையில், கிராமப்புறங்களில் வேலை வாய்ப்பின்மை தற்போது 7.3 விழுக்காடாக கூடியுள்ளது. முன்னதாக, 6.4%ஆக இருந்தது.
முந்தைய காலாண்டுகளில் முன்னேற்றம் கண்ட பொருளாதார மீட்சி நடவடிக்கைகள் இப்போது பாதிக்கப்படக் கூடும் என பொருளியல் நிபுணர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.
மும்பையை மையமாகக் கொண்டு இயங்கும் இந்திய பொருளியல் சூழலை கண்காணிக்கும் மையத்தின் தரவுகளை பொருளியல் நிபுணர்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரும் உன்னிப்பாகக் கவனித்து வருகின்றனர்.
மத்திய அரசு இந்த வேலையின்மை தொடர்பான தகவல்களை மாதந்தோறும் வெளியிடுவதில்லை என்பதால் அம்மையத்தின் தரவுகள் முக்கியத்துவம் பெறுகின்றன.
இதற்கிடையே, டிசம்பர் மாதம் வரையிலான காலகட்டத்தில் வேலை வாய்ப்பின்மை விகிதத்தில் நாட்டிலேயே, ஆக அதிகமாக 34.1 விழுக்காட்டுடன், ஹரியானா மாநிலம் முதல் இடத்தில் உள்ளது.
ராஜஸ்தான் 27.1%, ஜார்கண்ட் 17.3%, பீகார் 16%, காஷ்மீர் 15% என வேலை வாய்ப்பின்மை பட்டியலில் மாநிலங்கள் அடுத்தடுத்த இடங்களில் உள்ளன.
கடந்த 2019ஆம் ஆண்டின் கடைசிக் காலாண்டில், நகர்ப்புற இளையர்களில் 15 முதல் 29 வயதுக்குட்பட்ட பிரிவினரில் வேலை வாய்ப்பின்மை 19.2 விழுக்காடாக இருந்தது என்றும் கடந்த முழு முடக்க நிலையின்போது இது 21.1 விழுக்காடாக அதிகரித்தது என்றும் ஊடகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஒவ்வொரு குடும்பத்திலும் உள்ள பொருத்தமான உறுப்பினர்களின் வேலை வாய்ப்பின் அண்மைய நிலவரத்தின் அடிப்படையில், பொருளாதார கண்காணிப்பு மையம் தனது தரவுகளை வெளியிடுகிறது.
இந்தியாவின் பொருளியல் வேகமாக மீட்சி பெறும் என்று ஆளும் தரப்பில் கூறப்பட்டு வருகிறது. அதே வேளையில் பொருளியல் நிபுணர்கள் பல்வேறு விதமான கணிப்புகளைத் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில், புதிய அச்சுறுத்தலாக உருவெடுத்துள்ள ஓமிக்ரான் பாதிப்பு பொருளியல் நடவடிக்கைகளைப் பாதித்துள்ளது தெரிய வந்துள்ளது.
இந்தியாவில் 2020ஆம் ஆண்டு மார்ச் 25ஆம் தேதி முழு முடக்க நிலை அறிவிக்கப்பட்டது. அதன் பின்னர் பொருளியல் நடவடிக்கைகள் வெகுவாகப் பாதிக்கப்பட்டன.

