பாலத்தில் நிறுத்தப்பட்ட பிரதமர் மோடியின் கார்

பாலத்தில் நிறுத்தப்பட்ட பிரதமர் மோடியின் கார்

3 mins read
c19499ae-dcd7-48f8-a399-e77ef4f14401
பஞ்சாப் மாநிலத்தின் ஃபெரோஸ்பூரில் நிறுத்திவைக்கப்பட்டிருக்கும் பிரதமர் மோடியின் வாகன அணிவகுப்பு. படம்: பிடிஐ -

இந்தியாவின் பஞ்சாப் மாநிலத்தில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்க இருந்த நிகழ்ச்சிகள், பாதுகாப்பு விதிமீறல் காரணமாக ரத்தாகின. இது தொடர்பாக அம்மாநில அரசுக்கு மத்திய உள்துறை அமைச்சு கண்டனம் தெரிவித்துள்ளது.

பஞ்சாப் மாநிலத்தில் உள்ள ஹுசைனிவாலா பகுதியில், புதன்கிழமை (ஜனவரி 5) தியாகிகள் நினைவிடத்தில் நடைபெறும் நிகழ்ச்சியில் பங்கேற்க திட்டமிட்டிருந்தார் பிரதமர் மோடி. இதற்காக அவர் பதிண்டா விமான நிலையத்தைச் சென்றார்.

அப்போது வானிலை சீராக இல்லாததை அடுத்து, சாலை வழியாக அவர் ஹுசைனிவாலா பகுதிக்குச் செல்வது என முடிவானது. அதன்படி பிரதமரின் வாகன அணிவகுப்பு அங்கு கிளம்பியது.

ஆனால், ஹுசைனிவாலாவில் உள்ள தேசிய தியாகிகள் நினைவிடத்தில் இருந்து சுமார் 30 கிலோ மீட்டருக்கு முன்னால் பிரதமரின் வாகன அணிவகுப்பு மேம்பாலம் ஒன்றை அடைந்தபோது, அந்த மேம்பாலத்தில் போராட்டக்காரர்கள் சிலர் சாலையை மறித்து அமர்ந்திருந்தனர்.

இதனால் பிரதமரின் பாதுகாப்பு அதிகாரிகள் கடும் அதிர்ச்சிக்கு ஆளாகினர். பிரதமரின் பாதுகாப்பு அணிவகுப்பில் உள்ள வாகனங்கள் அனைத்தும் அந்தப் பாலத்திலேயே நிறுத்தப்பட்டன.

ஏறத்தாழ 20 நிமிடங்களுக்கு பிரதமர் தனது காருக்கு உள்ளேயே காக்க வைக்கப்பட்டார். பாதுகாப்பு ஏற்பாடுகளில் இப்படியொரு குறைபாடு எவ்வாறு ஏற்பட்டது எனும் கேள்வி எழுந்துள்ளது.

போராட்டத்தை அடுத்து, பிரதமரின் கார் மீண்டும் பதிண்டா விமான நிலையத்தைச் சென்றடைந்தது. அங்குள்ள அதிகாரிகளிடம், "நான் உயிருடன் திரும்பிவிட்டதாக உங்கள் முதல்வரிடம் தெரிவியுங்கள்," என்று பிரதமர் மோடி குறிப்பிட்டதாக ஊடகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

பிரதமரின் பயணத் திட்டம் குறித்து பஞ்சாப் அரசுக்கு முன்கூட்டியே தகவல் தெரிவிக்கப்பட்டிருந்தது என்றும் அதன்படி அம்மாநில அரசு விதிமுறைகளின்படி அவசர காலத்திற்கான திட்டத்தைச் செயல்படுத்த உரிய ஏற்பாடுகளைச் செய்திருக்க வேண்டும் என்றும் மத்திய உள்துறை அமைச்சு கூறியது.

ஒரு மேம்பாலத்தின் மீது நாட்டின் பிரதமரை 20 நிமிடங்கள் காத்திருக்க வைத்தது, பாதுகாப்பு ஏற்பாடுகளில் மிகப்பெரிய குறைபாடுகள் இருப்பதைக் காட்டுகிறது என்றும் அமைச்சு கூறியது. இது தொடர்பாக பஞ்சாப் அரசிடம் இருந்து விரிவான விசாரணை அறிக்கையையும் அமைச்சு கோரியுள்ளது.

இதற்கிடையே, இந்த விவகாரம் இப்போது உச்ச நீதிமன்றத்தையும் எட்டியுள்ளது.

இது தொடர்பாக பஞ்சாப் மாநில மூத்த வழக்கறிஞரான மணிந்தர் சிங், நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள மனுவில், "பஞ்சாப் அரசால் நிகழ்ந்த பாதுகாப்பு குளறுபடி குறித்து முழுமையான விசாரணை தேவை. இதுபோல் மீண்டும் நிகழாமல் இருப்பதை உறுதி செய்ய வேண்டும்" எனக் குறிப்பிட்டுள்ளார்.

இதற்கிடையே, பஞ்சாப் மாநிலத்தில் பிரதமர் பங்கேற்கும் நிகழ்ச்சிகளைத் தடுப்பதற்கான அனைத்து தந்திரங்களையும் காங்கிரஸ் மேற்கொள்வதாக பாஜக தேசியத் தலைவர் ஜே.பி.நட்டா சாடி உள்ளார்.

மக்கள் தங்களை நிராகரித்துவிட்டதால் காங்கிரசார் விரக்தியில் இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், பிரதமர் மோடிக்கு உள்ள பாதுகாப்பு அரணையும் மீறி அவருக்கு உடல் ரீதியில் தீங்கு விளைவிக்குமாறு பஞ்சாப் காவல்துறை வழிநடத்தப்பட்டுள்ளதாக மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி சாடி உள்ளார்.

இத்தகைய பரபரப்புக்கு மத்தியில், பிரதமரைத் தாக்கும் சூழல் ஏதும் உருவாகவில்லை என பஞ்சாப் முதல்வர் சரண்ஜித் சிங் கூறியுள்ளார்.

நடந்த சம்பவத்துக்காக தாம் வருத்தம் தெரிவிப்பதாகவும் நாட்டின் பிரதமரைக் காக்க தம் உயிரைக் கொடுக்கக்கூட தயாராக இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இச்சம்பவம் குறித்து விசாரணை நடத்த உயர்மட்டக் குழு ஒன்றை பஞ்சாப் அரசு அமைத்துள்ளது.