நச்சுவாயு தாக்கி ஆறு பேர் பலி
அகமதாபாத்: குஜராத்தில் சட்டவிரோதமாகச் செயல்பட்டு வந்த ரசாயன தொழிற்சாலையில் ஏற்பட்ட நச்சுவாயுக் கசிவால் ஆறு தொழிலாளிகள் பலியாகினர். இருபதுக்கும் மேற்பட்டவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். தொழிற்சாலையில் இருந்து லாரியில் கொண்டு செல்லப்பட்ட ரசாயனக் கழிவுகளை அதன் ஓட்டுநர் அருகே இருந்த பாதாளச் சாக்கடையில் ஊற்றியதாகத் தெரிகிறது. இதனால் கழிவுநீருடன் ரசாயனம் கலந்ததால் எதிர்பாராத வகையில் வாயுக்கசிவு ஏற்பட்டது. தொழிற்சாலைக்குள் நச்சுவாயு பரவிய நிலையில், எதனால் இப்படி ஆனது என்பதை உணர்ந்து சுதாரிப்பதற்குள் பணியில் இருந்த ஆறு தொழிலாளர்கள் அதை சுவாசித்ததால் மூச்சுத்திணறல் ஏற்பட்டு உயிரிழந்தனர். சிலர் தொழிற்சாலைக்கு வெளியே வேகமாக ஓடி வந்த நிலையில், வழியிலேயே சுருண்டு விழுந்தனர்.
நல்ல நேரம்: 11 ஆண்டுகளாக காத்துக் கிடந்த கணவர் மனைவியை பிரிந்தார்
ராய்ப்பூர்: திருமணமாகி 11 ஆண்டுகள் கடந்துவிட்ட பிறகும் குடும்ப வாழ்க்கையைத் தொடங்கமுடியாத விரக்தியில் சட்டீஸ்கரைச் சேர்ந்த ஆடவர் மணமுறிவு பெற்றுள்ளார். அவருக்கு 2010ஆம் ஆண்டு திருமணமாகி உள்ளது. அதன் பின்னர் 11 நாள்கள் மட்டுமே கணவருடன் இருந்த மனைவி, பிறந்த வீட்டுக்குச் சென்றுள்ளார். கணவர் அழைத்த போதெல்லாம் குடும்ப வாழ்க்கையைத் தொடங்க நல்ல நேரம் அமையவில்லை என்று மட்டுமே கூறியுள்ளார். 11 ஆண்டுகள் பலவிதமாக முயற்சி செய்தும், மனைவி திரும்ப வராததால் நீதிமன்றத்தை அணுகினார் அந்தக் கணவர். குடும்பநல நீதிமன்றத்தில் தனது மனு தள்ளுபடி ஆனதை அடுத்து, உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்தார். அவரது மனுவை விசாரித்த நீதிபதிகள், கணவருடன் சேர்ந்து வாழ விருப்பம் இல்லாத மனைவி 11 ஆண்டுகளை வீணடித்துவிட்டதாக குறிப்பிட்டு, கணவரின் மனுவை ஏற்று இருவருக்கும் மணமுறிவு அளித்து உத்தரவிட்டனர்.
11 முறை தடுப்பூசி போட்டுக்கொண்ட 84 வயது முதியவர் சிக்கினார்
பாட்னா: பல்வேறு அடையாள அட்டைகள், ஆவணங்களைக் காண்பித்து 11 முறை கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்ட, பீகாரைச் சேர்ந்த 84 வயது முதியவர் அதிகாரிகளிடம் சிக்கினார். மாதேபுரா மாவட்டத்தைச் சேர்ந்த பிரம்மதேவ் மண்டல் என்ற அந்த முதியவர், 12வது முறை தடுப்பூசி போட வந்தபோது சந்தேகம் அடைந்த அதிகாரிகள் அவரை விசாரித்தனர். அப்போது கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் தொடங்கி அக்டோபர் வரை பல இடங்களில் தடுப்பூசி போட்டுக்கொண்டதாக தெரிவித்துள்ளார். அதிக தடுப்பூசிகள் போட்டுக் கொண்டால் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும் என்பதால் இவ்வாறு செய்ததாக கூறியுள்ளார் அந்த முதியவர்.
சீன நிறுவனம்: ரூ.653 கோடி அபராதம்
புதுடெல்லி: இறக்குமதி வரி ஏய்ப்பில் ஈடுபட்ட சீனா நிறுவனத்துக்கு வருமான வரித்துறை ரூ.653 கோடி அபராதம் விதித்துள்ளது. அந்நிறுவனம் பல்வேறு விவரங்களைக் கணக்கில் காட்டாமல் வரி ஏய்ப்பு செய்ததாக வருமான வரித்துறை கூறியுள்ளது. இந்நிலையில், இந்தியாவில் அனைத்து உள்நாட்டுச் சட்டங்களையும் மதிப்பதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

