புதுடெல்லி: பாதுகாப்புமிக்க டெல்லி திகார் சிறையில் கைதி ஒருவர் கைப்பேசியை விழுங்கியதால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
இம்மாதம் 5ஆம் தேதி இச்சம்பவம் நிகழ்ந்ததாக சிறைத்துறை தலைமை இயக்குநர் சந்தீப் கோயல் தெரிவித்தார்.
"சந்தேகத்தின்பேரில் பணியாளர்கள் ஆய்வு செய்யச் சென்றபோது முதலாம் சிறையைச் சேர்ந்த கைதி ஒருவர் கைப்பேசியை விழுங்கிவிட்டார்," என்று அவர் சொன்னார்.
அதனைத் தொடர்ந்து, அக்கைதி டெல்லியில் உள்ள தீனதயாள் உபாத்யாய் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.
"அவரது உடல்நிலை நன்றாக இருக்கிறது. ஆனாலும், கைப்பேசி இன்னும் அவரது உடலினுள்தான் உள்ளது," என்று திரு கோயல் கூறினார்.
திகார் சிறை ஊழியர்களே கைதிகளுக்குக் கைப்பேசி உள்ளிட்ட வசதிகளைச் செய்துகொடுத்த தகவல் வெளியானதை அடுத்து, அங்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டு வருகின்றன.
கைதிகளுக்குச் சலுகை அளித்ததாகக் கூறி, கடந்த ஆறு மாதங்களில் திகார் சிறையைச் சேர்ந்த 40க்கும் மேற்பட்ட அதிகாரிகள்மீது பல்வேறு சட்ட அமலாக்க அமைப்புகள் வழக்குப்பதிவு செய்துள்ளன.
இந்நிலையில், சிறை வளாகத்தினுள் கைப்பேசி உள்ளிட்ட சட்டவிரோதப் பொருள்களைத் தடுக்கும் நோக்கில், மனித உடல்களை ஊடுருவக்கூடிய இரண்டு ஊடுகதிர் வருடிகள் அங்கு நிறுவப்பட இருப்பதாக திரு கோயல் தெரிவித்தார்.
அதனுடன், சிறையில் இருந்து வெளிப்படும் கைப்பேசி சமிக்ஞைகளைத் தடுக்க மூன்று புதிய தடுப்புக் கோபுரங்கள் அமைக்கப்படும் என்றும் அவர் சொன்னார்.

