மைசூரு: கால்வாய்க்குள் இறங்கிய காட்டு யானைகள் அதிலிருந்து வெளியேற முடியாமல் தவித்ததை அடுத்து, வனத்துறை ஊழியர்கள் அவை வெளியேற உதவினர்.
மைசூரு மாவட்டத்தில் உள்ள நாகரஒலே வனப்பகுதியில் ஏராளமான யானைகள் உள்ளன. மற்ற விலங்குகளும் அதிகமாக இருப்பதால், அவை அவ்வப்போது அருகே உள்ள கிராமங்களுக்குள் புகுந்து வெளியேறுவது வாடிக்கையாக உள்ளது.
இந்நிலையில், நேற்று முன்தினம் ஐந்து காட்டு யானைகள் வனப்பகுதிக்கு அருகே உள்ள கிராமத்துக்குள் நுழைந்து, தண்ணீரும் உணவும் தேடி அலைந்துள்ளன.
பீதி அடைந்த கிராம மக்கள் பட்டாசுகளை வெடித்து யானைகளை விரட்ட முற்பட்டபோது, அவை கிராமத்துக்கு வெளியே அமைக்கப்பட்டுள்ள கால்வாயில் இறங்கின.
அங்கு சிறிது நேரம் தண்ணீர் குடித்தும் விளையாடியும் மகிழ்ந்த யானைகளால் பின்னர் கால்வாயில் இருந்து வெளியேற முடியவில்லை.
கிராம மக்கள் உரக்க கூச்சலிட்டதால் செய்வதறியாமல் யானைகள் ஆவேசமடைய, தகவல் அறிந்து விரைந்து வந்த வனத்துறையினர், கிராம மக்களை அமைதிப்படுத்தி யானைகள் வெளியேற உதவினர்.
யானைகள் கால்வாயில் இருந்து வெளியேற முடியாமல் தவித்த காட்சியைக் காணொளியாகப் பதிவு செய்த பலர், அதை சமூக வலைத்தளங்களில் பரவலாகப் பகிர்ந்தனர்.
முன்னதாக, யானைகள் மிரளும் வகையில் எந்த நடவடிக்கையிலும் ஈடுபட வேண்டாம் என கிராம மக்களுக்கு வனத்துறையினர் அறிவுறுத்தினர். அப்போது வன விலங்குகள் அடிக்கடி ஊருக்குள் புகுந்து அச்சுறுத்தலை ஏற்படுத்துவதாக கிராம மக்கள் வனத்துறையினரிடம் தெரிவித்தனர்.

