இந்தியாவில் தொற்று புதிய உச்சம்; ஆந்திராவில் ஊரடங்கு அறிவிப்பு
புதுடெல்லி: இந்தியாவில் ஒரே நாளில் ஏறக்குறைய 194,720 பேர் கிருமித் தொற்றால் பாதிக்கப்பட்டு உள்ளனர்.
கடந்த 24 மணி நேரத்தில் 1,94,720 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக நேற்றுக் காலை மத்திய சுகாதாரத்துறை வெளியிட்ட தகவலில் தெரிவிக்கப்பட்டது.
மேலும் கிருமித் தொற்றிலிருந்து 60,405 பேர் குணமடைந்துள்ளனர்.
ஒரே நாளில் 442 பேர் மரணம் அடைந்துள்ளனர்.
தற்போது நாடு முழுவதும் பல்வேறு மருத்துவமனைகளில் 9,55,319 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
ஒரு பக்கம் கிருமித்தொற்று 3வது அலை சுழன்று அடிக்கும் நிலையில் மறுபக்கம் ஓமிக்ரான் பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இந்தியாவில் உருமாற்றம் அடைந்த 'டெல்டா' கிருமி யால் 2வது அலை உருவானது. தற்போது ஓமிக்ரான் கிருமி 3வது அலையாக உருவாகியுள்ளது.
இதற்கிடையே ஓமிக்ரான் தொற்று வேகம் அதிகரித்து வருகிறது. நேற்று முன்தின நிலவரப்படி இந்தியாவில் 4,461 பேர் ஓமிக்ரானால் பாதிக்கப்பட்ட நிலையில் நேற்று 4,868ஆக அதிகரித்துள்ளது.
அதே வேளையில் தொற்றிலிருந்து 1,805 பேர் குணமடைந்து உள்ளனர். மகாராஷ்டிராவில் அதிகபட்சமாக 1,281 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். ராஜஸ்தானில் 645 பேரும் டெல்லியில் 546 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
மற்றொரு நிலவரத்தில் ஆந்திராவில் தொற்றுப் பரவலை கட்டுப் படுத்துவது குறித்து அமராவதியில் உள்ள தலைமைச் செயலகத்தில் அம்மாநில முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடந்தது.
இதில் திரையரங்குகள், கடைத் தொகுதிகள் 50 விழுக்காட்டினருக்கு மட்டுமே அனுமதிக்க வேண்டும் என்று முடிவு செய்யப்பட்டதாக தெரிகிறது.
மேலும் ஆந்திராவில் இரவு 11 மணி முதல் காலை 5 மணி வரை இரவு நேர ஊரடங்கை அமல்படுத்த வேண்டும் என்று முடிவு எடுக்கப் பட்டுள்ளது.
ஜெகன்மோகன் ரெட்டியின் அறிவிப்பையொட்டி ஆந்திராவில் இரவு நேர ஊரடங்கை அமல்படுத்த அதிகாரிகள் ஏற்பாடு செய்து வரு கின்றனர்.
இந்த நிலையில் வருகிற 18ஆம் தேதியிலிருந்து 31ஆம் தேதி வரை இரவு நேர ஊரடங்கு ஆந்திராவில் அமல்படுத்தப்பட்டுள்ளது.
இதற்கான அறிவிப்பு வெளியிடப் பட்டுள்ளது.

