லக்னோ: உத்தரப்பிரதேச மாநிலத்தில் சட்டமன்றத் தேர்தல் நடைபெறவிருக்கும் வேளையில் அடுத் தடுத்து திருப்பங்கள் இடம்பெற்று வருகின்றன.
அந்தத் திருப்பங்கள் பாரதிய ஜனதாவுக்கு எதிராக அமைந்து வருகின்றன.
கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் உத்தரப்பிரதேச மாநில பாஜக அரசின் அமைச்சரவையில் இடம் பெற்றிருந்த அமைச்சர்கள் இருவர் அடுத்தடுத்து கட்சியிலிருந்து விலகி இருப்பது அந்த மாநில அரசியலில் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளன.
முதல்வர் யோகி ஆதித்யநாத் அமைச்சரவையில் வனத்துறை அமைச்சர் பொறுப்பில் இருந்த தாரா சிங் சவுகான் பாஜகவிலிருந்து விலகியுள்ளார். பாஜக அமைச்சரவையில் அங்கம் வகித்த சுவாமி பிரசாத் மவுரியா கட்சியிலிருந்து நேற்று முன்தினம் விலகிய நிலையில் தாரா சிங்கும் விலகியுள்ளார்.
உத்தரப்பிரதேசத்தில் 403 சட்டமன்றத் தொகுதிகளுக்குத் தேர்தல் நடைபெறுகிறது.
வரும் பிப்ரவரி 10 முதல் மார்ச் 10 வரை ஏழு கட்டங்களாக அங்கு தேர்தல் நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
பாஜக, சமாஜ்வாதி, பகுஜன் சமாஜ், காங்கிரஸ் ஆகியவை தேர்தலில் போட்டியிடும் முக்கிய கட்சி களாகும்.
பதவி விலகிய தாரா சிங், "பிற்படுத்தப்பட்ட மக்கள், தலித் மக்கள், விவசாயிகள் மற்றும் வேலை வாய்ப்பில்லாமல் தவித்து வந்த இளைஞர்களை அரசு சரியாக நடத்தவில்லை," என்று தனது பதவி விலகல் கடிதத்தில் குற்றம்சாட்டியுள்ளார்.
விரைவில் அகிலேஷ் யாதவ் தலைமையிலான சமாஜ்வாதி கட்சியில் அவர் சேர்வார் என எதிபார்க்கப்படுகிறது.
அதற்கு ஏற்ப அவருடன் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டுள்ள அகிலேஷ் யாதவ், "சமூக நீதிக்காக குரல் கொடுத்து வரும் தாரா சிங் சவுகானை வரவேற்கிறோம்" என தெரிவித்துள்ளார்.
தற்போது உத்தரப்பிரதேசத்தில் பாஜக ஆட்சி நடைபெற்று வரு கிறது.

