புதுடெல்லி: சீனா, பூட்டானுடனான சர்ச்சைக்குரிய எல்லைப் பகுதியில் பல்வேறு கட்டுமானங்களைத் துரிதப்படுத்தி வருகிறது.
அந்தப் பகுதியில் 200க்கும் மேற்பட்ட கட்டுமானங்களில் அது ஈடுபட்டு வருகிறது. ஆறு இடங்களில் இரண்டு மாடி கட்டடங்கள் கட்டப்பட்டு வருகின்றன என்று துணைக்கோளப் படத்தை ஆய்வு செய்துள்ள ராய்ட்டர்ஸ் தெரிவித்தது.
பூமியில் நடக்கும் சம்பவங்களை கண்காணித்து வரும், அமெரிக்க நிறுவனமான 'ஹாக்ஐ 360' அதற்கு ஆதாரமான படங்களையும் ஆய்வு களையும் வழங்கியுள்ளது.
2020ஆம் ஆண்டின் ஆரம்பத்தில் பாதைகளை அமைப்பதிலும் அந்தப் பகுதியைச் சீர் செய்வதிலும் சீனா ஈடுபட்டது.
அதன் பிறகு பல்வேறு கட்டடங்களை அது கட்டி வருகிறது என்று 'கேப்பெல்லா ஸ்பேஸ்', 'பிளானட் லாப்' ஆகியவற்றின் துணைக்கோளப் படங்களைச் சுட்டிக்காட்டி 'ஹாக்ஐ360' நிறுவனத்தைச் சேர்ந்த கிறிஸ் பிக்கர்ஸ் கூறியுள்ளார்.
2021ல் கட்டுமானப் பணிகள் விரைவுபடுத்தப்பட்டதை படங்கள் காட்டுகின்றன. முதலில் சிறிய அளவில் கட்டுமானங்கள் எழுப்பப் பட்டன. ஆயுதங்களை வைக்கவும் விநியோகிக்கவும் அவை கட்டப்பட்டிருக்கலாம். பின்னர் அடித்தளம் அமைக்கப்பட்டு கட்டடங்கள் எழுப்பப்பட்டன என்று திரு பிக்கர்ஸ் தெரிவித்துள்ளார்.
2021ஆம் ஆண்டு, கட்டடங்களை மிக விரைவில் கட்டி முடிக்கும் ஆண்டாக சீனாவுக்கு இருந்து உள்ளது என்றார் அவர்.

