தடுப்பூசித் திருட்டு; இருவர் கைது
ஹைதராபாத்: தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் உள்ள நகர்ப்புற பொது சுகாதார மையத்திலிருந்து கொவிட்-19 தடுப்பூசிகளைத் திருடிய இருவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். அவர்களி ட மிருந்து தடுப்பூசிகள் மற்றும் மற்ற திருடப்பட்ட பொருள்களை மிர்சவுக் காவல்துறையினர் மீட்டுள்ளனர்.
குற்றம் சாட்டப்பட்டவர்கள் ஜாவீத் கான், கவுஸ் பாஷா என அடையாளம் காணப்பட்டுள்ளனர் என்று இந்தியா டுடே தகவல் தெரிவித்தது. இம்மாதம் 9ஆம் தேதி கொவிஷீல்ட் 24 குப்பிகளையும் கோவாக்சின் 17 குப்பிகளையும் அவர்கள் திருடியதாகக் கூறப்படுகிறது.
பாஜக தலைமையகத்தில்
ஐம்பது பேருக்குத் தொற்று
புதுடெல்லி: டெல்லியில் உள்ள பாஜக தலைமையகத்தில் 50 ஊழியர்களுக்கு கிருமி தொற்று ஏற்பட்டுள்ளது. இதையடுத்து அவர்கள் அனைவரும் தனிமைப்படுத்தப் பட்டுள்ளனர். அலுவலகம் முழுவதும் சுத்திகரிப்பான் மூலம் சுத்தம் செய்யப்பட்டுள்ளது. முக்கிய பணிகளில் இருப்பவர்கள் மட்டும் அலுவலகம் வர அறிவுறுத்தப் பட்டுள்ளது. சென்ற திங்கள்கிழமை பாஜக தலைவர் ஜே.பி. நட்டாவும் தொற்றால் பாதிக்கப்பட்டார். கர்நாடகா முதல்வர் பசவராஜ் எஸ் பொம்மை, பீஹார் முதல்வர் நிதீஷ் குமார், தற்காப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் ஆகியோருக்கு தொற்று ஏற்பட்டுள்ளது.

