தளபதி நரவனே: மறைமுக போர் நீடிக்கிறது; இந்திய ராணுவம் எதையும் சமாளிக்கும்
புதுடெல்லி: லடாக் உள்ளிட்ட எல்லைப் பகுதிகளில் சீனாவின் அச்சுறுத்தல் இன்னும் குறையவில்லை என இந்திய ராணுவத் தலைமைத் தளபதி எம்.எம். நரவனே (படம்) தெரிவித்துள்ளார்.
இதற்கிடையே, எல்லையில் நிலவும் பதற்றத்தைக் குறைப்பது தொடர்பாக இந்தியா, சீனா இடையேயான 14வது கட்ட பேச்சுவார்த்தை ஆக்கப்பூர்வமாக நடைபெற்ற போதிலும் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் ஏதும் இல்லை என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
லடாக் எல்லைப் பகுதியில் இருந்து இரு தரப்பும் இன்னும் படைகளைத் திரும்பப்பெறாத நிலையில், பேச்சுவார்த்தை நீடிக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய தளபதி எம்.எம்.நரவனே, அனைத்துவித சவால்களையும் சந்திக்க இந்திய ராணுவம் தயாராக உள்ளது என்றார்.
சீனா, பாகிஸ்தான் நாடுகளில் இருந்து எழும் அச்சுறுத்தல்களை ஒருசேர சமாளிக்க இந்திய ராணுவம் மறுவரையறை செய்யப்பட்டு வருவதாகக் குறிப்பிட்ட அவர், "சீனாவின் புதிய நில எல்லைச்சட்டத்தின் கீழ் ஏற்படக்கூடிய எந்தவொரு ராணுவ மாற்றங்களையும் சமாளிப்பதற்கு இந்திய ராணுவம் போதுமான அளவில் தயாராக உள்ளது என்றார்.
"கிழக்கு லடாக் எல்லைப்பகுதியில் சீன ராணுவத்தை நாம் உறுதியுடன் எதிர்கொள்வோம். உரிய பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
"தற்போதைய எல்லையை சீனா ஒருதலைப்பட்சமாக மாற்றுவதற்கு முயற்சி செய்தால், இந்தியப் படைகள் அதற்கு வலுவான முறையில் பதிலடி கொடுக்கும்," என்று தளபதி எம்.எம்.நரவனே திட்டவட்டமாகத் தெரிவித்தார்.
இந்தியாவுக்குள் ஊடுருவும் வகையில் பாகிஸ்தான் எல்லையில் சுமார் 400 பயங்கரவாதிகள் வரை முகாம்களில் தயாராக உள்ளதாகவும் உளவுத்துறை மூலம் இத்தகவல் கிடைத்துள்ளது என்றும் தளபதி நரவனே தெரிவித்தார்.
மறைமுகப் போர் நீடித்து வருவ தாகக் குறிப்பிட்ட அவர், அச்சுறுத்தல் இன்னும் குறையவில்லை என்றார்.
எனவே, இந்திய ராணுவம் தொடர்ந்து எச்சரிக்கையுடனேயே இருக்க வேண்டியுள்ளது என்றும் அச்சுறுத்தலை புறந்தள்ள முடியாது என்றும் அவர் குறிப்பிட்டார்.
இதற்கிடையே, பூடான் உடனான சர்ச்சைக்குரிய எல்லைப் பகுதியிலும் ஆறு இடங்களில் சீன ராணுவம் அத்துமீறியுள்ளது.
அங்கு இருநூறுக்கும் மேற்பட்ட புதிய கட்டுமான பணிகளை சீனத் தரப்பு மேற்கொண்டு வருவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
சீனாவின் இந்த அத்துமீறிய நடவடிக்கை அண்மைய செயற்கைக்கோள் புகைப்படத்தின் மூலம் அம்பலமாகி உள்ளது என்றும் இதனால் இந்தியாவுக்கும் புதிய அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது என்றும் பாதுகாப்பு நிபுணர்கள் கருது கின்றனர்.
தங்களுக்குச் சொந்தமான நிலப்பரப்பில் மேற்கொள்ளும் நடவடிக்கைகள் நாட்டின் இறையாண்மைக்கு உட்பட்ட விவகாரம் என சீனா தெரிவித்துள்ளது.
எல்லைப் பிரச்சினைகள் குறித்து வெளிப்படையாக பேசக்கூடாது என்பது பூடானின் கொள்கையாகும்.

