பெங்களூரு: கொரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில், காங்கிரஸ் கட்சி மேற்கொண்டுள்ள பாத யாத்திரைக்கு தடை விதிக்கப்படுவதாக கர்நாடக முதல்வர் பசவராஜ் பொம்மை அறிவித்துள்ளார்.
மேகதாதுவில் அணை கட்டுவது உறுதி என்றும் அது தொடர்பான திட்டத்தை மாநில அரசு செயல்படுத்தும் என்றும் அவர் கூறியுள்ளார்.
மேகதாது அணையைக் கட்ட வலியுறுத்தி, கர்நாடக காங்கிரஸ் சார்பில் கடந்த 10ஆம் தேதி 11 நாள் பாத யாத்திரை தொடங்கியது. இதற்கு மூத்த காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவகுமார் தலைமை ஏற்றார்.
இந்நிலையில், கொரோனா தொற்றுப்பரவல் நெருக்கடி வேளையில், பாத யாத்திரை செல்ல அனுமதித்தது ஏன் என்று அம்மாநில அரசுக்கு உயர் நீதிமன்றம் கேள்வி விடுத்தது. இதையடுத்தே, பாத யாத்திரைக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய அம்மாநில முதல்வர் பசவராஜ் பொம்மை, நிலம், நீர் தொடர்பாக மாநிலத்திற்கு ஒரு பிரச்சினை என்றால் அனைத்துக் கட்சிகளும் ஒன்றிணைந்து செயல்படுவோம் என்றார். மாநில நிலைமைக்காக இணைந்து போராடுவோம் என்றும் கூறினார்.

