கோட்டயம்: இந்தியா முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய கன்னியாஸ்திரியை பாலியல் பலாத்காரம் செய்ததாகக் கூறப்பட்ட வழக்கிலிருந்து கேரள பாதிரியார் விடுவிக்கப்பட்டுள்ளார்.
கோட்டயத்தில் உள்ள 'மிஷனரிஸ் ஆப் ஜீசஸ்' சபையைச் சேர்ந்த கன்னியாஸ்திரி, ரோமன் கத்தோலிக்க திருச்சபையின் ஜலந்தர் மறைமாவட்ட பிஷப்பாக இருந்த பிராங்கோவால் பாலியல் பலாத் காரத்துக்கு ஆளானதாக குற்றம்சாட்டினார்.
2014 மற்றும் 2016க்கு இடையில் கேரளாவிற்குப் பயணம் செய்தபோது அவர் தன்னைப் பாலியல் பலாத்காரம் செய்ததாகவும் கன்னி யாஸ்திரி கூறியிருந்தார். இதனால் பிராங்கோ முலக்கல் ஜலந்தர் மறைமாவட்ட பொறுப்பில் இருந்து விலக்கப்பட்டார்.
மேலும் பிஷப் பிராங்கோ முலக்கல் மீது 2018ம் ஆண்டில் கோட்டயம் மாவட்ட காவல்துறை பாலியல் பலாத்கார பதிவு செய்தது.
இதையடுத்து 2018 செப்டம்பர் 21ஆம் தேதி அன்று பிராங்கோ கைது செய்யப்பட்டார். பாலியல் பலாத்காரம், இயற்கைக்கு மாறான பாலியல் மற்றும் மிரட்டல் ஆகிய பிரிவுகளின் கீழ் அவர் மீது சிறப்பு புலனாய்வுக் குழு வழக்குப் பதிவு செய்தது.
இதற்கிடையே பிராங்கோ முலக்கல் அக்டோபர் 16, 2018 அன்று பிணையில் விடுவிக்கப்பட்டார்.
இந்த நிலையில் வழக்கு கோட்டயம் மாவட்ட நீதிமன்றத்தில் நடந்து வந்தது. இந்த வழக்கில் 11 பேர் உட்பட 83 சாட்சிகள் பெயர்கள் குறிப்பிடப்பட்டிருந்தன.
அவர்களில் பாதிரியார்கள், 22 கன்னியாஸ்திரிகள் அடங்குவர்.
மொத்தம் 83 சாட்சிகளில் 39 பேர் அழைக்கப்பட்டு விசாரிக்கப்பட்டனர்.
முன்னதாக தனக்கு எதிரான முதல் தகவல் அறிக்கையை ரத்து செய்ய வேண்டும் என பிராங்கோ கேரள உயர் நீதிமன்றத்தையும் உச்ச நீதிமன்றத்தையும் நாடி இருந்தார். இரு நீதிமன்றங்களும் அவரது வேண்டுகோளை நிராகரித்துவிட்டன.
இந்தச் சூழ்நிலையில் பிஷப் பிராங்கோ முலக்கல் மீதான பாலியல் பலாத்கார வழக்கின் தீர்ப்பை கூடுதல் செஷன்ஸ் நீதிமன்றத்தின் மாவட்ட நீதிமன்ற நீதிபதி ஜி.கோபகுமார் நேற்று அறிவித்தார்.
பிஷப் பிராங்கோ காலை 9.30 மணியளவில் நீதிமன்றத்திற்கு அழைத்து வரப்பட்டார்.
அவர் தனது சகோதரர் மற்றும் மைத்துநருடன் வந்து பின் கதவு வழியாக நீதிமன்றத்திற்குள் நுழைந்தார்.
"குற்றம் சாட்டப்பட்டவருக்கு எதிரான சாட்சியத்தை அரசு தரப்பு நிரூபிக்கத் தவறிவிட்டதால் அனைத்து குற்றச்சாட்டுக்களிலிருந்து பிராங்கோ முலக்கலை விடுவிக்கிறேன்," என்று நீதிபதி கூறினார். தீர்ப்பை கேட்ட பிராங்கோ முலக்கல் கண்ணீர் விட்டார்.
ஆனால் பிஷப் முலக்கல் விடுவிக்கப்பட்டதற்கு தேசிய மகளிர் ஆணையம் அதிர்ச்சி தெரிவித்துள்ளது. "பாதிக்கப்பட்ட பெண் உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்ய வேண்டும். நீதிப்போராட்டத்தில் கன்னியாஸ்திரிக்கு ஆதரவாக தேசிய மகளிர் ஆணையம் உறுதுணையாக இருக்கும்," என்று ஆணையத்தின் தலைவர் ரேகா ஷர்மா தனது டுவிட்டர் பதிவில் தெரிவித்துள்ளார்.

