புதுடெல்லி: பிரதமர் மோடி அண்மையில் பஞ்சாப் சென்றபோது பாதுகாப்பில் குளறுபடி ஏற்பட்டதால் அவர் திரும்பிச் சென்றார். இது குறித்து விசாரணை நடைபெற்று வரும் வேளையில் பஞ்சாப் முதல்வர் சரண்ஜித் சிங் பிரதமரிடம் வருத்தம் தெரிவித்துள்ளார்.
நலத்திட்டங்கள் தொடக்க விழாவில் பங்கேற்பதற்காக பிரதமர் பஞ்சாப் மாநிலத்திற்கு சென்றபோது சாலையை மறித்து சிலர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதனால் அவரது வாகனம் விழா நடைபெறும் இடத்தை அடைய முடியாமல் பாலத்தில் காத்திருக்கும் நிலை ஏற்பட்டது.
பிரதமரின் பாதுகாப்பில் குறைபாடு ஏற்பட்டதை அடுத்து அவரது பயணம் பாதியில் ரத்து செய்யப்பட்டது. இந்தச் சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்த உச்ச நீதிமன்றம் குழு அமைத்துள்ளது.
இந்த நிலையில் பிரதமர் மோடியின் பஞ்சாப் பயணத்தின்போது பாதுகாப்பு குளறுபடி ஏற்பட்டது தொடர்பாக அவருடன் காணொளி மூலம் உரையாடிய பஞ்சாப் முதல்வர் சரண்ஜித் சிங் சன்னி முறைப்படி வருத்தம் தெரிவித்துள்ளார்.
கிருமிப் பரவல் தடுப்பு நடவடிக்கை குறித்து மாநில முதல்வர் களுடன் பிரதமர் மோடி காணொளி வாயிலாக நேற்று முன்தினம் ஆலோசனை நடத்தினார்.
அப்போது பிரதமருடன் உரையாடிய பஞ்சாப் முதல்வர் சரண்ஜித் சிங் சன்னி, பஞ்சாப் பயணத்தின்போது நடந்த சம்பவத்திற்கு வருந்து வதாகக் கூறினார்.
"நீங்கள் எனக்கும், எங்கள் அனைவருக்கும் மரியாதைக்குரியவர்கள். உங்களது பஞ்சாப் பயணத்தின்போது என்ன நடந்ததோ அதற்கு நான் வருந்துகிறேன். பிரதமர் வாழ்நாள் முழுவதும் உற்சாகத்துடன் ஆரோக்கியமான வாழ்வை வாழ வேண்டும்," என இந்தியில் கவிதை வரிகளை கூறி பிரதமருக்கு சரண்ஜித் சிங் சன்னி வாழ்த்துத் தெரிவித்தார்

