செய்திக்கொத்து

செய்திக்கொத்து

2 mins read
399ceb57-a93a-4354-a2bc-2a222fa435cf
-

டெல்லி சந்தையில் வெடிகுண்டு

புதுடெல்லி: டெல்லியின் எல்லைப்புற பகுதியில் உள்ள காசிப்பூர் மண்டி பகுதியில் பூக்கள், காய்கறி, மீன் மற்றும் இறைச்சி சந்தைகள் செயல்படுகின்றன. இதில், மலர் சந்தையில் நேற்று காலையில் கேட்பாரற்று ஒரு பை கிடந்ததால் காவல்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

அங்கு வந்த டெல்லி காவல்துறை மற்றும் தேசிய பாதுகாப்பு படையின் வெடிகுண்டு நிபுணர்கள் அந்தப் பகுதியை தங்களுடைய கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர். கேட்பாரற்று கிடந்த பையை வெடிகுண்டு நிபுணர்கள் திறந்து பார்த்தபோது அதில் ஒரு வெடிகுண்டு இருந்தது தெரியவந்தது. இதையடுத்து பாதுகாப்பான முறையில் அது செயலிழக்கச் செய்யப்பட்டது. இதனால் அப்பகுதியில் பெரும் பதற்றம் ஏற்பட்டது. அது, சிறிய அளவிலான வெடிகுண்டு என்றாலும் குடியரசு தின விழாவிற்கு முன்பாக மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள சந்தைப் பகுதியில் வெடிகுண்டு கண்டுபிடிக்கப்பட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இது குறித்து டெல்லி சிறப்பு பிரிவு காவல்துறை வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறது.

இந்தியா-சீனா பேச்சில்

முன்னேற்றமில்லை

புதுடெல்லி: இந்தியாவும் சீனாவும் நடத்திய 14வது சுற்று பேச்சுவார்த்தையில் எந்தவித முன்னேற்றமும் ஏற்படவில்லை. 2020 மே மாதம் கிழக்கு லடாக் எல்லை பகுதிகளில் சீன வீரர்கள் அத்துமீறி நுழைய முயற்சி செய்தனர். அவர்களை இந்திய வீரர்கள் தடுத்து நிறுத்தியதால் எல்லையில் பதற்றம் ஏற்பட்டது. அதே ஆண்டில் ஜூன் 15ஆம் தேதி இரு தரப்பு வீரர்களுக்கும் இடையே கைகலப்பு ஏற்பட்டது.

இதில் 20 இந்திய வீரர்கள் வீரமரணம் அடைந்தனர். சீன வீரர்களும் உயிரிழந்ததாக ஊடகங்கள் தெரிவித்தன. இந்த நிலையில் எல்லையில் இரு நாடுகளும் கூடுதல் ராணுவ வீரர்களை குவித்து வந்ததால் பதற்றம் மேலும் அதிகரித்தது. இதனால் பதற்றத்தைத் தணிக்க இரு நாட்டு ராணுவ உயர் அதிகாரிகள் நிலையில் பேச்சு வார்த்தை நடைபெற்றது. 13 சுற்றுப் பேச்சுவார்த்தை முடிந்து 14வது சுற்று பேச்சு வார்த்தை நடைபெற்றது. ஆனால் உடன்பாடு எதுவும் எட்டப்படவில்லை.

இதுவரை 14 பயங்கரவாதிகள்

சுட்டுக் கொல்லப்பட்டனர்

குல்காம்: ஜம்மு-காஷ்மீர் மாநிலம் குல்காமில் பயங்கரவாதிகளுடன் ஏற்பட்ட மோதலில் மூத்த காவலர் ரோஹித் சிப் உயிரிழந்தார். அவரது உடலுக்கு மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்திய ஜம்மு-காஷ்மீர் டிஜிபி தில்பாக் சிங், பின்னர் செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்தார்.

"இவ்வாண்டில் இதுவரை எட்டு என்கவுன்டர்கள் மூலம் பாகிஸ்தானைச் சேர்ந்த ஏழு பேர் உட்பட 14 பயங்கரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர்.

"எங்களுடைய துணிச்சலான காவலர் ரோஹித் சிப்பை இழந்தது துரதிர்ஷ்டவசமானது. என்கவுன்டரின்போது ​​பயங்கரவாதிகள் பொதுமக்களை பணயக் கைதிகளாகப் பிடித்து கேடயங்களாகப் பயன்படுத்த முயன்றனர். ஆனால் எங்கள் துணிச்சலான ஜவான்கள் பொதுமக்களைக் காப்பாற்றியுள்ளனர்," என்று அவர் தெரிவித்தார்.