புதுடெல்லி: இந்தியா அமைதியை விரும்புகிறது. அதனால் இந்தியா அமைதியாகவே இருக்கும் என்று தப்புக்கணக்குப் போட வேண்டாம் என்று இந்திய ராணுவத் தளபதி மனோஜ் முகுந்த் நரவானே தெரிவித்துள்ளார்.
ராணுவ தினத்தை ஒட்டி ஜெனரல் மனோஜ் முகுந்த் நரவானே வீரர்களிடையே நேற்று உரையாற்றி னார்.
அப்போது "அமைதி நிலவ வேண்டும் என்ற இந்தியாவின் விருப்பம் என்பது அதன் வலிமையில் இருந்து பிறந்தது, எனவே இந்நாடு குறித்து யாரும் தவறாக புரிந்துகொண்டு விடக் கூடாது," என்று அவர் குறிப்பிட்டார்.
இந்தியாவின் எல்லையை மாற்ற மேற்கொள்ளப்படும் முயற்சிகளை நமது ராணுவம் முறியடிக்கும் என்றார் ஜெனரல் எம்எம் நரவானே.
"இந்திய ராணுவம் சமகால சவால்களை மட்டுமல்லாமல் எதிர்கால சவால்களையும் எதிர்கொள்ளும் வகையில் தயாராக உள்ளது. மிகுந்த இடர்பாடுகளுக்கு இடையே நமது இந்திய ராணுவத்தின் சிப்பாய்களும் அதிகாரிகளும் பணி புரிந்து வருகின்றனர்," என்று அவர் பாராட்டினார்.
லடாக், அருணாச்சலப் பிரதேசம் உள்ளிட்ட எல்லைப்பகுதிகளில் சீனாவுடன் மோதல் போக்கு நீடிக்கும் வேளையில் ராணுவத் தளபதி மனோஜ் முகுந்த் நரவானே, இந்தியாவைப் பற்றி தப்புக்கணக்கு போட வேண்டாம் என்று கூறியுள்ளார்.
ஆங்கிலேயர்களிடம் இருந்து இந்தியா சுதந்திரம் பெற்ற பிறகு 1949ஆம் ஆண்டு ஜனவரி 15ஆம் தேதி சுதந்திர இந்தியாவின் முதல் ராணுவ தளபதியாக ஜெனரல் கே.எம். கரியப்பா பொறுப்பேற்றார். இதனை நினைவுகூரும் விதமாக ஆண்டுதோறும் ஜனவரி 15ஆம் தேதி இந்திய ராணுவ தினமாக கொண்டாடப்படுகிறது. இந்த நாளில் ராணுவ வீரர்கள் மற்றும் போரில் உயிர்நீத்த தியாகிகளுக்கு மரியாதை செய்யப்பட்டு வருகிறது.
ராணுவ தினத்தையொட்டி ராணுவத்தினருக்கு அதிபர் ராம்நாத் கோவிந்த், பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
பிரதமர் மோடி தனது டுவிட்டர் பதிவில் "நமது துணிச்சலான, மரியாதைக்குரிய வீரர்களுக்கும் அவர்களது குடும்பத்தினருக்கும் வாழ்த்துகள். இந்திய ராணுவம் அதன் துணிச்சலுக்கும் நேர்த்திக்கும் பெயர் பெற்றது. தேசப் பாதுகாப்பிற்காக இந்திய ராணுவத்தின் விலைமதிப்பற்ற பங்களிப்பை வார்த்தைகளால் சொல்ல முடியாது," என்று தெரிவித்துள்ளார்.

